புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், “ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இன்று நான் ஓய்வுபெற இருக்கிறேன். ஆதரவையும், வாழ்த்துகளையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நாட்டுக்கு சேவை செய்ய எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, வழிகாட்டி, ஊக்குவித்து வந்த பிரதமர் மோடிக்கு மிகவும் நன்றி. அவரது சிந்தனைகளாகலும், எண்ணங்களாலும் கிடைத்த பலன்கள் ஏராளம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிலையான ஆதரவுக்கும் உறுதுணைக்கும் மனமார்ந்த நன்றி. நாட்டின் நிதி ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக இருந்ததால், கடந்த ஆறு ஆண்டுகளில் பல சவால்களைச் சமாளிக்க அது எங்களுக்கு உதவியது.
நிதித்துறை மற்றும் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் நன்றி. ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு யோசனைகளையும், கொள்கைக்கான பரிந்துரைகளையும் வழங்கிய நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில் அமைப்புகள், சங்கங்கள், விவசாயம், கூட்டுறவு மற்றும் சேவைத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்றி.
ரிசர்வ் வங்கியின் ஒட்டுமொத்த குழுவுக்கும் மிகப்பெரிய நன்றி. முன் எப்போதும் இல்லாத, கடினமான காலகட்டத்தை நாம் ஒன்றாகச் சேர்ந்து வெற்றிகரமாக வழிநடத்தினோம். நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நிறுவனமாக ரிசர்வ் வங்கி இன்னும் உயரமாக வளரட்டும். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,“நான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் (ஆரம்ப மாதங்களில்) வருவாய் மற்றும் பொருளாதார விவகாரங்களின் செயலாளராகவும் பணியாற்றியபோது என் மீது நம்பிக்கையையும் உறுதியையும் வைத்திருந்த, அரவணைத்த மறைந்த அருண் ஜேட்லியை அன்புடன் நினைவு கூர்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.