டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், சைபர் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடுபட்டு சேர்த்த பணத்தை ஆன்லைன் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் TRAI முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மெசேஜ் ட்ரேசபிலிட்டி எனப்படும் புதிய விதி
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக, நாளை, 2024 டிசம்பர் 11ம் தேதி முதல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மெசேஜ் ட்ரேசபிலிட்டி (Message Traceability) எனப்படும் புதிய விதியை அமல்படுத்தவுள்ளது. நமது மொபைல் போனில் வரும் ஸ்பேம் மெசேஜ்களை குறைக்க இந்த விதி அமல்படுத்தப்படுகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிய கால அவகாசம்
முன்னதாக, இந்த புதிய விதி டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் சிறிது கால அவகாசம் கோரியதை அடுத்து அமல் செய்யப்படும் தேதி ஒத்தி போடப்பட்டது. முதலில் இந்த விதி அக்டோபர் 31-ம் தேதி அமல்படுத்தப்பட இருந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அமல்படுத்தும் தேதி டிசம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அதுவும் நீட்டிக்கப்பட்டு, தற்போது நாளை, அதாவது டிசம்பர் 11ம் தேதி அமல்படுத்தப்படுகிறது.
புதிய விதியால் கிடைக்கும் நன்மைகள்
மோசடி செய்திகள் மற்றும் ஸ்பேம் செய்திகளின் மூலத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் இந்த நிலையை மாற்றும் நோக்கத்தை கொண்டுள்ளது. போன்களுக்கு வரும் செய்திகளின் மூலத்தைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குவதன் மூலம், மோசடியில் இருந்து மக்களைப் பாதுகாக்க TRAI நம்புகிறது. இந்த புதிய அமைப்பின் மூலம், செய்தியை அனுப்புபவர் முதல் அதை வழங்குபவர் வரை ஒவ்வொரு நபரையும் கண்டறிய முடியும்.
OTP செய்திகள் தாமதமாகாமல் இருக்க நடவடிக்கை
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அமல்படுத்தும் புதிய விதியின் காரணமாக, வங்கி மற்றும் பிற சேவைகளுக்கான OTP போன்ற முக்கியமான செய்திகள் தாமதமாகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கிய செய்திகள் குறித்த நேரத்தில் சென்றடையும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.
பாதுகாப்பான, வெளிப்படையான தகவல் தொடர்பு
இந்தப் புதிய விதியின் கீழ், பதிவு செய்யப்படாத விளம்பரச் செய்திகளும் ஸ்பேமும் தடுக்கப்படும். இதன் மூலம் வர்த்தக ரீதியாக அனுப்பப்படும் விளம்பர செய்திகளை எளிதாக அடையாளம் காணலாம். இந்த விதியின் கீழ் செய்திகளை அனுப்பவது தொடர்பாக 27,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன, மேலும் செயல்முறை விரைவான வேகத்தில் நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த புதிய விதி தகவல்தொடர்புகளை பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருக்க உதவி புரியும்.