தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அணை கட்ட முடியாத நிலையில் தடுப்பணை கட்டுவதன் மூலம் அப்பகுதியில் நீராதாரத்தை பெருக்க முடியும். ஏற்கெனவே 500 தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டில் 1,000 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்’’ என்றார்.
கும்பகோணம் தொகுதி உறுப்பினர் அன்பழகன் பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள், மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘‘நகர்ப்புறங்களில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பது உண்மைதான். அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னையில் 3 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தால் அவற்றை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. தெருவில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து அபராதம் விதித்தாலும், அவற்றை மீண்டும் விடுகின்றனர். மாடுகளை பிடித்துச் சென்றால் பொதுமக்கள் கோபப்படுகின்றனர். எம்எல்ஏக்களாகிய நீங்களும் சிபாரிசுக்கு வருகிறீர்கள். நீங்கள் சிபாரிசுக்கு வரமாட்டீர்கள் என்றால் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம், நீர் மேலாண்மைக்கு சிறப்பான திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டன. 14 ஆயிரம் ஏரிகளில், 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்ட நிலையில், மீதமுள்ள 8 ஆயிரம் ஏரிகளை தூர்வாரினால் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். வெள்ள பிரச்சினை இருக்காது’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘குடிமராமத்து திட்டம் நல்ல திட்டம். அதை குறை கூற மாட்டேன். உறுப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும்’’ என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசும்போது, ‘‘எனது தொகுதியில் உள்ள வரதராஜபுரத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அரைகுறையாக உள்ளன. தற்போது ஒரே நாளில் நீர்வடிந்துவிட்டாலும், திருப்புகழ் கமிட்டி அறிக்கையை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தொகுதி மக்களுக்கு திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளேன். நான் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவது அமைச்சர் கையில்தான் உள்ளது’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘அவர் மீண்டும் எம்எல்ஏவாக ஆவது என் கையில்தான் என்று கூறிவிட்டார். அவரது தொகுதி பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.