சென்னை: திமுக அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் மானியம் வழங்கும் நோக்கத்தை நீர்த்து போகச்செய்யும் என்று மீம் ஒன்றை வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தாமல் குழப்பம் ஏற்படுத்தியதால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி வெளியிட்டுள்ளது திமுக. திமுக அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், திமுக தொண்டர்களுக்குப் பயனளிப்பதற்காக மட்டுமே சில தகுதித் தளர்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி, உண்மையான பயனாளிகளுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்திருக்கிறது இந்த திமுக அரசு. மக்களுக்குப் பயனளிக்காத அரசியல் அர்த்தமற்றது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.