புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த நடவடிக்கை

தற்போது பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதுள்ள அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை தொடர்ந்தும் செயல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளதுடன், குறித்த நிறுவனங்களுக்கிடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை வழங்கி புதிய தொழிநுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசு கண்டறிந்துள்ளது.

இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.