வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா: முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.11) கேரளா செல்கிறார். அங்கு தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கேரள மாநில திமுக ஏற்பாடு செய்துள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், கோயில் நுழைவு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பெரியார் அப்போராட்டத்தில் பங்கேற்று பெற்ற வெற்றியை நினைவு கூரும் விதமாக, தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் சிலை அமைக்கப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது. அந்த நினைவகம் பழமையாக மாறியதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை ரூ.8.14 கோடியில் சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி, சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது.

இதில், பெரியாரின் சிலை, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சிக்கூடம், நூலகம், பார்வையளர்கள் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிச.12-ம் தேதி திறந்து வைக்கிறார். இவ்விழாவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார். இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு, கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து, கோட்டயம் செல்கிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர். முருகேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில திமுக சார்பில், கேரள பாரம்பரிய முறையில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.