இந்தியர் என போலி சான்றிதழ் கொடுத்து தெலங்கானா மாநிலத்தில் ஜெர்மனி வாழ் இந்தியரான வேமுலவாடா சென்னமனேனி ரமேஷ் 4 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
சென்னமனேனி ரமேஷ் என்பவர் தெலங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற அரசியல்வாதியாக உள்ளார். இவர் ஜெர்மனி வாழ் இந்தியர் ஆவார். ஆனால், போலி சான்றிதழ் கொடுத்து, இவர் கடந்த 2009-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வேமுலவாடா தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், இவர் கே. சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, 2010 முதல் 2018 வரை இடைத்தேர்தல் உட்பட சென்னமனேனி ரமேஷ் 3 முறை அதே வேமுலவாடா தொகுதியில் டிஆர்எஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் போலி சான்றிதழ் கொடுத்து தன்னை ஒரு இந்தியர் என்று பொய்யான தகவல்களை அளித்து இதுவரை 4 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனவும், இது இந்திய அரசியல் சட்டத்துக்கு புறம்பானது எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதி ஸ்ரீநிவாஸ் என்பவர் ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளதாவது: ஜெர்மனி நாட்டின் குடிமகனான சென்னமனேனி ரமேஷ், தவறான மற்றும் போலி சான்றிதழ்களை வழங்கி இந்திய அரசியல் சாசனத்தை ஏமாற்றி உள்ளார் என்பது விசாரணையில் ஊர்ஜிதமாகி உள்ளது.
ஜெர்மனி நாட்டின் குடிமகன் உரிமையை ரத்து செய்ததற்கான ஆதாரத்தை இதுவரை நீதிமன்றத்தில் ரமேஷ் தாக்கல் செய்ய வில்லை என்பதால், அவர் ஜெர்மனி நாட்டு குடிமகனே என தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, கடந்த 2023ல் தெலங்கானாவில் நடந்த தேர்தலில், சென்னமனேனி ரமேஷ் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் வேமுலவாடா தொகுதியில் போட்டியிட்டு போலி சான்றிதழ் மூலம் வெற்றி பெற்றுள்ளார். இது தற்போது செல்லாது. ஆகையால், இவரை எதிர்த்து தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதி ஸ்ரீநிவாஸ் தேர்தலின் போது செலவழித்த ரூ. 25 லட்சத்தை ரமேஷ் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் ரூ. 5 லட்சத்தை நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.