`விடாமுயற்சி’ , `குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கிறார் அஜித்.
சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக அவரை கொண்டாடுவதாக `கடவுளே அஜித்தே!’ என கோஷமிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பிறகு, பல பொது நிகழ்வுகளில் இதே போன்ற கோஷம் எழுப்பப்படுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. தற்போது அஜித், “அந்த வகையில் கோஷமிட வேண்டாம், எனது பெயரை சொல்லி மட்டும் அழையுங்கள்!” என தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க…. அஜித்தே ‘ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.” என அஜித் குறிப்பிட்டிருக்கிறார்.