உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பம் செய்த துன்புறுத்தல்களை 24 பக்க அளவுக்குக் கடிதமாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துள்ளார்.
34 வயதான அதுல் சுபாஷ் ஏற்கெனவே அவரது மனைவியைப் பிரிந்துவிட்டார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
சுபாஷ் வைத்திருந்த 24 பக்க கடிதத்தில் 4 பக்கம் கைப்படவும், 20 பக்கங்கள் டைப் செய்தும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு நீதி வேண்டும் என்று கோரியுள்ளார்.
அவர்களது திருமணம் சரியானதாக இல்லை என்பதைக் குறிப்பிட்டு அவரது மனைவி, மனைவியின் அண்ணன், அம்மா, மாமா ஆகியோரை குற்றம்சாட்டியிருக்கிறார். தன்னை மிரட்டி பணம் பறிக்க அப்பாவியான தனது 4 வயது மகனை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சுபாஷ் அந்த கடிதத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்குகளைக் குறிப்பிட்டுள்ளார். 24 பக்க மரண குறிப்பைச் சிலருக்கு இ-மெயிலில் அனுப்பியதுடன், அவர் தொடர்பிலிருக்கும் என்.ஜி.ஓ ஒன்றுக்கும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் குடும்பநல நீதிமன்றம் சுபாஷுக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுபாஷுக்கு எதிரான வழக்குகளில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மாதம் 2 லட்சம் பராமரிப்புத் தொகையும் கேட்டிருக்கின்றனர்.
தற்கொலை செய்யும் முன்னர் நீதி கிடைக்க வேண்டும் என்ற பலகையையும் தனது வீட்டில் மாட்டி வைத்துள்ளார். போலீஸார் சுபாஷின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.