Chennai Super Kings Latest News Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இந்த 2025 ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மேலும், சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்கள் தற்போது பயிற்சி முகாமில் கலந்துகொள்ள உள்ளனர். அதற்காக பல சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வருகை தர உள்ளனர். அப்படியிருக்க தற்போது ஐபிஎல் குறித்து எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கிவிட்டது எனலாம்.
தோனி மீண்டும் ஒரு சீசனை விளையாடுகிறார். அவர் சென்னையில் மட்டும் 7 போட்டிகளில் விளையாடுவாரா அல்லது அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என கேள்விகள் எழுந்த நிலையில், பெரிய விக்கெட் கீப்பர் பேக்-அப் என சிஎஸ்கே (CSK) இந்த ஏலத்தில் எடுக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் சையத் முஷ்டாக் அலி தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார், டெவான் கான்வே விக்கெட் கீப்பராக இருந்துள்ளார், தற்போது வன்ஷ் பேடி என்ற இளம் விக்கெட் கீப்பர் அணியில் இருக்கிறார். ஆனால், இவர்கள் யாருமே தோனிக்கு சரியான மாற்று என நாம் சொல்லிவிட இயலாது.
வெறியோடு வரும் தல தோனி
எனவே, தோனி (MS Dhoni) இந்த சீசனில் வழக்கம்போல் 14 லீக் போட்டிகளிலும் விளையாடுவார் என்பது உறுதியாகிறது. கேப்டன்ஸியில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார். இது ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) கட்டமைத்த அணி என்பதால் அவரின் கேப்டன்ஸி இன்னும் பலம்பெற்றிருக்கும். அதேபோல் கடந்த முறை சிஎஸ்கே அணியில் இருந்த டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷைக் ரஷீத் முகேஷ் சௌத்ரி ஆகியோர் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், ரவிசந்திரன் அஸ்வின், சாம் கரன், விஜய் சங்கர் உள்ளிட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர்களும் அணிக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், சிஎஸ்கே கடந்த தொடரில் 5ஆவது இடத்தோடு நிறைவு செய்தது. ஆர்சிபி, சிஎஸ்கே, டெல்லி, லக்னோ ஆகிய அனைத்து அணிகளும் 14 புள்ளிகளை பெற்றிருந்தாலும், கடைசி லீக் போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்து சிஎஸ்கே மூன்றாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டது. கடைசி போட்டியில் நடந்த சில நிகழ்வுகள்தான் தோனியை மீண்டும் ஒரு சீசனை விளையாட தூண்டியிருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர். 2023ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பின் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு தற்போது சிஎஸ்கேவுக்கு சிறப்பாக உள்ளது.
பலமாகியுள்ள சிஎஸ்கே
அதற்கு காரணம் கடந்த 2024ஆம் ஆண்டை விட இந்த சீசனில் இரண்டு விஷயங்கள் மேம்பட்டுள்ளன. அதனால், சிஎஸ்கே பலம் வாய்ந்த அணியாக திகழும் என்கின்றனர். ஆம், சிஎஸ்கே சுழற்பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சிலும் கடந்த சீசனை விட சிஎஸ்கே முன்னேறியுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சேப்பாக்கத்தில் சுழற்பந்துவீச்சு கூட்டணி…
நூர் அகமதிற்கு ரூ.10 கோடி, ரவிசந்திரன் அஸ்வின் ரூ.9.75 கோடி ஆகியோருக்கு பெரிய தொகையை கொடுத்ததன் மூலம் சுழற்பந்துவீச்சை பலமாக்க வேண்டும் என்பது அவர்களின் பிளானாக இருந்திருக்கிறது. ஜடேஜா – இடதுகை ஆர்தோடாக்ஸ், அஸ்வின் – ஆஃப் ஸ்பின்னர், நூர் அகமது – இடதுகை அன்ஆர்தோடாக்ஸ் என வெவ்வேறு வகை சுழற்பந்துவீச்சை சிஎஸ்கே அடுக்கிவைத்திருக்கிறது.
இதில் ஷ்ரேயாஸ் கோபால் அஸ்வினுக்கு பேக்அப்பாக இருப்பார். கடந்த முறை தீக்ஷனாவுக்கு பதில் வேறு யாரும் இல்லாமல் சிஎஸ்கே திண்டாடிய நிலையில், இந்த முறை அந்த பிரச்னை இருக்காது. சேப்பாக்கத்தில் 7இல் 7 போட்டிகளையும் சிஎஸ்கே நிச்சயம் வெல்லலாம்.
மிரட்டும் வேகப்பந்துவீச்சு படை
பதிரானா ஏற்கெனவே அணியில் இருக்க கலீல் அகமது, சாம் கரன், ஜேமி ஓவர்டன், நாதன் எல்லிஸ், அன்சுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி என முதற்கட்ட பிளேயிங் லெவனுக்கான வீரர்கள், அவர்களுக்கான பேக்-அப் வீரர்கள் ஆகியோரை கச்சிதமாக எடுத்திருக்கிறது சிஎஸ்கே. கலீல் அகமதிற்கு முகேஷ் சௌத்ரி மட்டுமின்றி குர்ஜப்னீத் என மூன்று இடதுகை வேகப்பந்துவீச்சு இருக்கிறது.
அன்சுல் கம்போஜ் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். துஷார் தேஷ்பாண்டேவின் இடம் அவருக்குதான். சாம் கரன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக செயல்படுவார்கள். இதுவும் கடந்தாண்டு மிஸ்ஸாகியது. நாதன் எல்லிஸ் சூழலுக்கு தகுந்தாற் போல் எடுத்துக்கொள்ளலாம். பதிரானா காயமடைந்தாலும் கவலைப்பட வேண்டாம். பந்துவீச்சு பிரிவு முன்னைக்காட்டிலும் பலமாகியிருப்பதன் மூலமும், சேப்பாக்கத்தில் அசைக்க முடியாத அணியாக திகழ்வதாலும் நிச்சயம் இந்த முறை சிஎஸ்கே பிளே ஆப் செல்கிறது எனலாம்.