மும்பையைச் சேர்ந்த காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காமெடி நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று கூறி அழைத்தனர். அவருக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து கொடுத்தனர். சுனில் பால் டெல்லி சென்றவுடன் அங்கிருந்து அவரை காரில் மீரட்டிற்கு அழைத்துச்சென்றனர். செல்லும் வழியில் சுனில் பாலை வேறு ஒரு காருக்கு மாற்றினர். அவரை மீரட்டிற்கு அழைத்துச்சென்று, அங்கு அடைத்து வைத்து 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். அவர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்று கூறி பணம் கேட்டனர். அதோடு அவரது மொபைல் போனை பயன்படுத்தி சுனில் பால் நண்பர்களுக்கு போன் செய்து பணம் கேட்டனர். சிலர் பணம் அனுப்பி வைத்தனர். சுனில் பாலுக்கு என்ன ஆனது என்ற தெரியாமல் இருந்தது. இது குறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சுனில் பாலை சைபர் கிரிமினல்கள் அடைத்து வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சுனில் நண்பர்களில் சிலர் கடத்தல்காரர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பி இருந்தனர். அந்த வங்கிக்கணக்கை போலீஸார் முடக்கினர்.
அதோடு அது யாரது வங்கிக்கணக்கு என்று விசாரித்த போது அது ஒரு நகைக்கடைக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அங்குச் சென்று போலீஸார் விசாரித்த போது இரண்டு பேர் வந்து சுனில் பால் பெயரில் 2.25 லட்சத்திற்கு நகைகள் எடுத்துச்கொண்ட பிறகு ஆன்லைன் மூலம் பணத்தை தங்களுக்கு டிரான்ஸ்பர் செய்தனர் என்று நகைக்கடைக்காரர் தெரிவித்தார்.
சுனில் பால் தன்னை பிடித்து வைத்திருந்தவர்களிடம் 20 லட்சம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். அதனை பேச்சுவார்த்தை நடத்தி 7.5 லட்சமாக குறைத்தனர். அந்த பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். அதன் பிறகு சுனில் பாலிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்து விமான டிக்கெட் எடுத்துக்கொள்ள சொன்னார்கள். அதோடு தங்களுக்கு வேலை கிடைத்தவுடன் 7.5 லட்சத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக கடத்தல்காரர்கள் கூறி அனுப்பிவைத்தனர். 5 பேர் கொண்ட கும்பல் காமெடி நடிகரை 24 மணி நேரம் அடைத்து வைத்திருந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.