YesMadam: 'Stress'-ஆக இருந்த 100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனரா? – வைரல் மெயிலும் பின்னணியும்!

YesMadam என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் வீடு வீடாக சலூன் சேவை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஷார்க் டேன்க் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் பிரபலமானது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் 100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு இ-மெயில் ஸ்க்ரீன் ஷாட் பரவியது. இதனால் அந்த நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டதுடன் இணையத்தில் பல விமர்சனங்களை சந்தித்தது.

வேலைப்பளு கணக்கெடுப்பில் ‘ஸ்ட்ரெஸ்’ இருப்பதாகக் கூறிய 100 ஊழியர்கள் உடனடியாக நிறுவனத்திலிருந்து விலகுமாறு சமூக வலைதளங்களில் பரவிய இ-மெயில் தெரிவிக்கிறது.

உண்மையாகவே 100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனரா? அந்த நிறுவனமே விளக்கமளித்திருக்கிறது.

எஸ்மேடம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவில்லை எனக் கூறுவதுடன், பணியிட மன அழுத்தம் குறித்து விவாதத்தை ஏற்படுத்தவே முயன்றதாக தெரிவித்துள்ளது.

எஸ்மேடம்

“ஊழியர்கள் மன அழுத்தத்துடன் இருந்ததற்காக நாங்கள் பணி நீக்கம் செய்ததாக பரவும் சமூக ஊடக பதிவுக்காக நாங்கள் மனம் வருந்துகிறோம். அது போன்ற மனிதாபிமானமற்ற செயலை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம் என தெளிவாக கூறிக்கொள்கிறோம். எங்கள் டீம் எங்கள் குடும்பம் போல, அவர்களின் தியாகம், கடின உழைப்பு மற்றும் முனைப்புதான் எங்கள் வெற்றிக்கான அடித்தளம். பணியிடங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறிப்பிட்டுக்காட்ட திட்டமிட்டு வெளியிடப்பட்டது. அதற்கு கோபமாக கமென்ட் செய்தவர்கள், வலுவான கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

மன அழுத்தம் குறித்த கணக்கெடுப்பில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதாக கூறியவர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், அவர்களுக்கு சிறிய இடைவவேளை அளித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. “அவர்களை கைவிடவில்லை, அவர்களின் மன அழுத்தத்தை விட்டுவிடவே ஊக்கப்படுத்தியிருக்கிறோம்” என அறிக்கையில் கூறியுள்ளது எஸ்மேடம் நிறுவனம்.

அறிக்கை

எக்ஸ் மற்றும் லின்க்ட் இன் தளங்களில் பரவிய அந்த இ-மெயிலின் ஸ்கிரீன் ஷாட் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. அப்படி அந்த மெயிலில் என்னதான் இருந்தது.

“சமீபத்தில் வேலை மற்றும் ஸ்ட்ரெஸ் குறித்து உங்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாங்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். பலரும் உங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தீர்கள். நாங்கள் அவற்றை மதிக்கிறோம். ஒரு நிறுவனமாக ஆரோக்கியமான மற்றும் உறுதுணையான பணிச் சூழலை உருவாக்க வேண்டியது எங்கள் கடமை. அதனால் நாங்கள் கவனமாக உங்கள் கருத்துகளை பரிசீலித்தோம்.

வேலையில் யாரும் மன அழுத்தத்துடன் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய, கணிசமான ஸ்ட்ரெஸ் இருப்பதாக கூறியவர்களைப் பிரிந்து பயணிக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தனித்தனியாக விவரங்கள் தெரிவிக்கப்படும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி” என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mail

பணிநீக்கம் உண்மையல்ல, மன அழுத்தம் குறித்துப் பேசவே இவ்வாறு மெயில் அனுப்பப்பட்டது என நிறுவனம் கூறினாலும் சமூக வலைதளத்தில் அந்த நிறுவனத்தின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

உங்களது பணியிட Stress அனுபவம் குறித்து கமென்ட்டில் தெரிவியுங்கள்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.