இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon Lee) அவர்கள் அண்மையில் (04) சபாநாயகர் கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அவர்களும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பில் புதிய சபாநாயருக்கு தென்கொரியத் தூதுவர் தனது பாராட்டைத்
தெரிவித்துக்கொண்டார். தென்கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை நினைவுகூர்ந்த தூதுவர், இந்த உறவை மேலும் வலுப்படுத்தி இலங்கையின்
அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை தென்கொரியா வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை செயற்படுத்தி புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி அத்திட்டங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர
எதிர்பார்த்திருப்பதாகவும் தென்கொரியத் தூதுவர் சுட்டிக்காட்டினார். மேலும், கண்டி சுரங்கப்பாதை (Kandy Tunne) திட்டத்தை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
இரு நாட்டுப் பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கு தலைமைத்துவ மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தென்கொரியத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், இதற்கு தென்கொரியவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.