இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ( Julie J.Chung) தெரிவித்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி அவர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசின் வலுசக்தி அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் இரு நாடுகளுக்கு இடையிலான வலுசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடுவது இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது.
இந்த சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி அவர்கள் புதிய அரசின் வலுசக்திக் கொள்கை மற்றும் வலுசக்தி பற்றிய நோக்கத்தை விவரித்தார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு அமெரிக்க அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், ஒரு சிறந்த நட்பு நாடாக அமெரிக்க நட்புறவு மற்றும் ஆதரவை மிகவும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.