புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (டிச.12) புதுச்சேரி காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக, நாளை (டிச.12) அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மாலை முதலே புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (டிச.12) புதுச்சேரி காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.