புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் சம்பல் மசூதி வழக்கு விவகாரத்தில் இந்து தரப்பினரின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவரது புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சம்பலிலுள்ள ஜாமா மசூதி, அங்கிருந்த ஹரிஹரன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதன் மீது சம்பலின் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. இதன் நீதிபதி, மசூதியினுள் நவம்பர் 19-இல் கள ஆய்வுக்கு அனுமதி அளித்து, அதே நாளில் அப்பணியும் துவங்கியது. அதன்பின், மீண்டும் நவம்பர் 24-இல் ஆய்வு நடத்த முற்பட்டபோது, வெடித்த கலவரத்தால் 4 பேர் பலியாகினர்; 34 பேர் கைதாகினர்.
இந்நிலையில், சம்பல் மசூதி வழக்கின் இந்து தரப்பு வழக்கறிஞராக விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளார். இவர்தான் வாரணாசியின் கியான்வாபி மசூதியின் கள ஆய்வு தொடர்பான இந்து தரப்பின் வழக்கறிஞர். உ.பி.யின் மதுராவிலுள்ள ஷாயி ஈத்கா மசூதியின் வழக்கிலும் இவரே இந்து தரப்பின் வழக்கறிஞராக உள்ளார். எனவே, இவரை அடையாளம் கண்டு வைக்கும்படி சம்பலின் முஸ்லிம்கள் இடையே வாட்ஸ்அப் தகவல்கள் பறிமாறப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தத் தகவலில் வழக்கறிஞர் விஷ்ணுவின் புகைப்படமும் பரிமாறப்படுவதாக புகார் உள்ளது. இதன்மூலம், தம் உயிருக்கும் ஆபத்து என அஞ்சிய வழக்கறிஞர் விஷ்ணு, சம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.