`பல்'லேகா -2: திரு – தெய்வத்திரு… இடைப்பட்டதே வாழ்க்கை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.

முன் கதைச் சுருக்கம்:

பல் வலியின் காரணமாகப் பல் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். அங்கே பணிபுரியும் நர்ஸ்க்கு மெல்லிசை எனப்பெயர் வைத்து டாக்டருக்காக காத்திருக்கிறேன்.

தொடர்ச்சி…

தலைகுனிந்து ஒரு நிமிடம் கண்களை மூடினேன். மெல்லிசை வைத்த பஞ்சிலிருந்த மருந்து எச்சிலில் ஊறி கசந்தது. இருந்தாலும், இலேசான மிதப்பு. அந்த பீடா ஞாபகம் வராமல் இல்லை. எந்த பீடா?

அது நண்பனின் திருமணத்தன்று தலைச்சுற்ற வைத்த பீடா. நான் முதலில் வேண்டாமென்று தான் சொன்னேன். வெறும் வெற்றிலையில் இனிப்பு என்றதும் என் மனம் ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டது. வெற்றிலைபோட்டு நாக்கைத்துருத்திச் சிவந்திருக்கா? என மாறுகண்ணில் நாமே பார்த்து பரவசம் கொள்ளும் அந்தத் தருணத்தை தான் நான் எதிர்பார்த்தேன்.

நாக்கை வெளியே தள்ள முயன்றபோது பீடா ஆளையே கீழே தள்ளியது. தலைச்சுற்றியதா? பூமி சுற்றியதா? என்ற குழப்பத்தில் சாலையோரத்தில் கவிழ்ந்தேன். அது தான் எனக்கும் பீடாவிற்குமான கடைசி பேச்சு வார்த்தை. பிறகு பீடாக் கடையைப் பார்த்தால் ”போடா” எனச்சிரிப்பதோடு சரி, கைக் குலுக்குவதெல்லாம் கிடையாது.

நாக்கு சிவந்திருக்கா?

மருதாணி போட்ட கை சிவந்திருக்கா? எனப் பார்ப்பதெல்லாம் பொடுசாக இருக்கும் போது தமக்கு நாமே சிருஷ்டித்துக்கொள்ளும் திளைப்புகள். அறியாத வயதில் வெட்கத்தில் முகம் சிவப்பதை எதோடு ஒப்பிடுவது?

சித்தரிப்புப் படம்

போட்டோசூட் இல்லாத காலத்தில் மருதாணி தான் போட்டோகளுக்கு அழகு. முழங்கைவரை வரையப்பட்ட மருதாணிப்பூக்கள் தான் இன்றைக்கு அழகு. வீட்டு விஷேசங்களில் போனால் போகிறதென்று மிச்ச மருதாணியை என் பெருவிரலுக்கு மட்டுமே கொசுறாக வைத்து விடுவார்கள்.

மருதாணி வைக்கவும், வைத்த மருதாணி சிவக்கவில்லையென்றும் நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்து காணொளி க்ளிப்கள் மட்டும் இருந்தால் அது ஆயிரம் விருப்பக்குறிகள் ஒப்பேற்றும்.

ஓட்டைப்பல்லுக்கு எதற்கு மருதாணி? ஒட்டைப்பல் உன்னையெல்லாம் எவ கட்டிக்குவ? என அத்தைமார்களின் கேலிக்குப் பயந்து பெரும்பாலான நேரங்களில் கூட்டத்தில் வாயைத் திறக்கவே மாட்டேன். புதிய பல் முளைக்கும் வரை வாயை மூடிக்கொண்டு திரியவேண்டும்.

ஒரு முறை நானாக பிடுங்கிய பல் நெடுநாள் வரவே இல்லை. தாய்மாமாவை அழைத்து விருந்து வைத்து அரிசி உமியில் கீறல் போட வைத்தார்கள்.

நல்லதொரு நாளில் மாமா மடியில் கிழக்குநோக்கி உட்கார வைக்கப்பட்டேன். குழந்தை மனம் பிடித்தவர்களின் மீது தான் மடியேறும். இடது கையை மடித்து தலையை இடுக்கி பூவில் எழுதுவது போல நோகாமல் பாடிக்கொண்டே கீறினார்.

பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

பல்லி இரண்டும் போவானேன்?

தங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

ரெண்டுபணம் தண்டம் தண்டம் தண்டம்.

மெல்லிசையையும் இப்படிதான் இடது கையில் தாடையை மேல்நோக்கித் தள்ளி வலது கையில் டார்ச் லைட் அடித்தார். அவர் என் முகத்தின் மீது டார்ச் அடிக்கும் போது உள்ளங்கையில்  மருதாணி போட்டிருந்ததுதெரிந்தது. அது  சிவப்பு சிக்னல் போலத்தெரிந்தது.

படித்தவர்கள் மாதிரி இருக்கிறீர்கள், பல்லை கேர் பண்ண  மாட்டீங்களா?

மாமாவுக்கும் மெல்லிசைக்கு இந்த இடத்தில் ஒரு வித்தியாசம்.  மாமாவிடமிருந்து வந்தது இசை, அது அரண். மெல்லிசையிடமிருந்து வந்தது வசை, இது முரண்.

படிச்சிருந்தா?  

ஒரு விதத்தில் மெல்லிசை கேட்டது நியாயமாகக்கூட இருக்கலாம். படிக்காத மாமாவுக்கு ஒரு நாளும் பல் வலி வந்ததில்லை. இன்று கூட முறுக்கு சாப்பிடும் வலிமையோடு மீசையை முறுக்குகிறார். வெற்றிலை சீவலால் பற்கள் மஞ்சளாகி இருக்கிறதே தவிர, பற்கள் வலிமையானவை. அவரின் பல்வரிசை நுணுக்கமானது. அதை அவர் போகிறபோக்கில் பாதுகாக்கிறார். அதற்காக அவர் எந்தவிதப் பிரத்தியட்சம் செய்வதில்லை. ஆனால், அவர்  வேப்பங்குச்சியால் பல் துலக்கும் முறையே அலாதியானது.

கிணற்றுமேட்டில் வேட்டியை மடித்து ஒரு குதி குதிப்பார்  பாருங்கள், வெள்ளாடு ஒன்று இலைகளை எட்டிப்பறிக்கும் இலாகவம் இருக்கும். கைக்கு எட்டும் வேப்பங் குச்சியை உடைத்து அழகாக்குவார். அதை வாயில் மென்று கசப்பைத் துப்பி நாலாபுறமும் சிறுபூச்சியை வாயிற்குள் சுழற்றி அலசுவது சிலம்பம் சுற்றுவது போல இருக்கும்.

மாமா மட்டுமல்ல, மாமா ஊரில் எல்லா சாமிகளும் வேப்பங்குச்சியில் தான் பல் விலக்கும் போல. நேர்த்திக்கடனுக்குச் செய்யப்பட்ட  மண்குதிரைகளுக்குக்கூடப் பற்கள் நேர்த்தியாக இருக்கும்.

சித்தரிப்புப் படம்

ஆனால், அத்தைக்கு வரிசையில் அமையாத எத்துப்பற்கள். அவள் சிரிக்கும் போது முன் பற்கள் முந்திக்கொண்டு வரும். அதற்காக அவள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. விரல் சூப்பியதால் வந்த வினையென வாய் விட்டுச் சிரிப்பாள்.  ஒப்பாரி வைக்கும்போது ஒப்புக்குக் கூட முந்தானையால் முகம் மறைக்க மாட்டாள். 

சராசரி மனிதர்களின் வாழ்வியலைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் கால்நெடுக வரவேற்பறையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் மெல்லிசைக்கு என்ன கவலையோ?  வேப்பங்குச்சி போலிருக்கும் பேனாவை வைத்து பல்லில் இடித்துக்கொண்டிருந்தார். அது அவரின் மேனெரிசம் போல. ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். இதைத் தவறு என மெல்லிசையிடம் சொல்லப் பயம்.

அறைக்கு வெளியே வேகமாகச் சென்று எச்சிலைத்துப்பித்  திரும்பினேன். கதவில் காலணிகளை வெளியே விடவும் என  எழுதியிருந்தது. அதற்குக்கீழே ”ஈ” காட்டும் பல்வரிசை விளம்பரம் மேலும் எரிச்சலூட்டியது. இவ்விரண்டு விஷயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்குச் சொல்ல ஆயிரம் இருக்கிறது.

எனக்கு எப்போது காதல் வந்தது எனத் தெரியவில்லை. ஆனால் இது தான் காதல் தேசம் என நானே நினைத்துக்கொண்ட ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறைய இளவரசிகள் இருந்தார்கள்.

அதில் ஒருத்தி மஞ்சுளா. எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பிடித்தமானவள். அந்தக் காலக்கட்டத்தில் காதல் என்பதெல்லாம் சும்மா நண்பர்களுக்குள் அத்திப்பூத்தாற்போல “டேய் அவ உன்னைப்பார்த்தா” என்ற எந்த இலக்கணத்திற்கும் உட்படா ஒரு வாக்கியம் தான்.

அந்த வாக்கியம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அந்த வாக்கியத்திற்கான காலம் ஈசல் வாழ்நாள் தான். அன்றே உருவாகி அன்றே செத்துப்போகும். அவ்வளவு தான்.

மஞ்சுளா என்னைப் பார்த்ததாக வீட்டிற்கு வரும் வழியில் தான் சொன்னார்கள். நான் எங்கேயோ மிதந்து வீட்டிற்குச் செல்வதாக நினைத்தேன். அடுத்த நாள் எப்படியெல்லாம் போக வேண்டுமென்று கனவு கண்டேன் தெரியுமா?

நான் முதலில் சரிசெய்ய வேண்டியதாக இருந்தது என் டிரவுசர் தான். அதில் இருபுறத் திறப்பு இருக்கும். பட்டனுக்கு நேர் எதிரே சறுக்கி விளையாடச் சாகசம் ஓட்டையில் தெரியும். அதை மறைக்கவேண்டும்.

அன்றைக்கு டிரவுசர் ஓட்டையெல்லாம் பெரிய விஷயமல்ல. ஆனால் மஞ்சுளா எதாவது நினைத்தாள். என்ன செய்வது? இரவே உறுதியான முடிவெடுத்தேன். அவளிடம் போய் இதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லி விட வேண்டும்.

அடுத்த நாள் சோஷியல்ச் டீச்சர் பதில் சொல்லவில்லையென விரலைத் திருப்பி பிரம்பால் அடித்தார். நான் அழவில்லை. மஞ்சுளா முன் மாவீரன் அழுவதா? நான் மஞ்சுளாவைத் திரும்பிப் பார்த்தேன்.

சித்தரிப்புப் படம்

அவள் கண்களில் கண்ணீர். எனக்கான ஒரு ஜீவன் வாடுவதைக் கண்டு துடிதுடித்துப்போனேன். டேய்… மஞ்சுளா அழறா பாரு இது டீச்சர் சொன்ன வார்த்தை. அய்யோ டீச்சருக்கு தெரிந்து போச்சா? கடவுளே எனக் கண்களை மூடினேன்.

மஞ்சுளா எல்லாம் எப்படி படிக்கிற? நீயும் தானே இருக்கிற? டிரவுசர் ஓட்டைக்குள் பிரம்பு புகுந்து பின்பக்கத்தில் ஓர் அச்சு ஏற்படுத்தி சாவகாசமாக வெளியே வந்தது. அந்த அடியில் ஓர் ஈசல் செத்துப்போனது பிடித்தவர்களுக்குப் பிடித்தவாறு நடப்பது என்ற ஒற்றை அச்சில் தான் உலகம் சுழல்கிறது. நான் வெறுங்காலுடன் உள்ளே  நடந்தேன்.

அமைதியாக உட்கார்ந்து கண்ணாடிக்கதவை மீண்டும் பார்த்தேன். கண்ணாடிக்கதவில்   தள்ளு,இழு என எழுதியிருந்தது. அதைப்பல்லுக்குப் பொருத்திப்பார்த்தேன். அங்குமிங்கும் “தள்ளி இழு”த்தால் பல் வந்து விடும்! சரி தான்.  என் மிதமிஞ்சிய அறிவை நானே மெச்சிச்.  சிரித்தேன்.

சுற்றும்முற்றும் பார்த்தேன். யாருமில்லை. மெல்லிசை தன்னைப்பார்த்துத் தான் சிரிப்பதாக நினைத்தால் என்னச் செய்வது? நர்ஸிடம் பல்லைக்காட்டியதாகப் பேச்சு  வந்து விடக்கூடாதே! வாயைப் பொத்திக்கொண்டு குனிந்தேன்..

நான் குனிந்தபோது என் தலையை மெல்லிசைப் பார்த்திருப்பாளோ?  தலைகீழாகக் கவிழ்த்த வடச்சட்டி  மாதிரி அல்லவா என் தலை தெரிந்திருந்திருக்கும!  தலையைத் தடவி நொந்து கொண்டேன்.

இந்த முடி வளர்க்கும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒரு சித்தா டாக்டர் தான்.  இந்தச் சுதந்தரப்பறவையோடு  சகப்பறவையாக பக்கத்து அறைக்குக் குடிவந்தவர் தான் அந்தச் சித்தா டாக்டர் பெயர்ச் சொல்லாம்.

டாக்டர்  கிருஷ்ணகுமார் என்றால் குன்னூரில் நாங்கள் தங்கியிருந்த சாந்தி  விலாஸ்  மேன்சன் முழுவதுக்கும் பரிச்சயம்.  பத்து  மெடிகல் சான்றிதழ் கொடுத்த வள்ளல்.

மேன்சன் அனைவருக்கும் இலவச மருத்துவம். பஜ்ஜிகூட  கொடுத்துச் சாப்பிடும் பட்சி.

குன்னூரில் ஊசிக்குத்தும் குளிர்காலங்களில் வரும் பல் வலிக்குத் தற்காலிக நிவாரணம் அளித்தவர். அவர் தான் டூத் பிரஷ்களின் வகைகளைச் சொல்லி நல்ல டூத் பிரஷ் வாங்க வைத்தார். 

இப்படி ஒவ்வொரு செயலிலும் பிரஷாக வைத்திருக்கும் நல்ல நண்பன் என்பது உண்மை. நான்? பதில் இதோ.

தீபாவளி வாழ்த்தச்சொல்லத் தீபாவளி அன்று போன் செய்தேன்.

ஹலோ…

யார் பேசுறது…

பெயர் சொன்னேன்.

ஓ…ஞாபகம் வரலையே

நீண்ட நாட்களாகி விட்டன. மறந்து போயிருக்குமல்லவா?  அதனால், குன்னூரையும் சேர்த்திக்கொண்டு மீண்டும் பெயரைச் சொன்னேன்.

ஓ…தம்பி ஞாபகம் வந்துடுச்சு…

நல்லாயிருக்கீங்களா… அக்கா.

நலலாயிருக்கிறேன்.

தம்பிக்கிட்ட பேசலாமென்று கூப்பிட்டேன்.

ஓ…

இருக்காரா?

எதிர்முனை அமைதியாக இருந்தது.

ஹலோ அக்கா… தம்பிக்கிட்ட கொடுங்க

பதில் இல்லை. விசும்பல் மட்டும் கேட்டது.

பதில் வரவே இல்லை. இனி பதில் வரப்போவதில்லை. பின்னர் திரு.கிருஷ்ணகுமார் தெய்வத்திரு.கிருஷ்ணகுமாராகி ஒரு வருடமாகி விட்டதாக அறிந்தேன். .

திரு என்பதற்கும் தெய்வத்திரு என்பதற்கும் இடைப்பட்டதே வாழ்க்கை.

டாக்டர் எனக்கு சிகிச்சை எடுக்கத்தெரியாதா? என நேருக்கு நேராகக் கேட்ட மகான். இந்தக் கேள்வி மட்டும் எத்தனை வருடங்களானாலும் மறையாது. அந்தக் கேள்வியில் தான் ஞானம் வந்தது.

தொடரும்…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.