புதுடெல்லி: மாநிலங்களவையில் ஏற்படும் அமளிக்கு மிகப் பெரிய காரணமே அதன் தலைவரான ஜக்தீப் தன்கர்தான் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இன்று மதியத்துக்கு முன்பாகவே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, “நாட்டின் துணைக் குடியரசு தலைவர்களாக டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ஷங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் போன்ற பல பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள்.
1952 முதல் இதுவரை, அரசியலமைப்பின் 67-வது பிரிவின் கீழ், குடியரசு துணைத் தலைவரை நீக்குவதற்கான தீர்மானம் எந்தக் குடியரசு துணைத் தலைவருக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டதில்லை. ஏனென்றால், அவர்கள் பாரபட்சமற்றவர்களாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை. விதிகளின்படி சபையை நடத்தினார்கள். ஆனால், இன்று விதிகளை விட்டுவிட்டு சபையில் அரசியல் செய்யப்படுகிறது.
இந்திய துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் அதிகாரபூர்வ தலைவராக இருப்பார் என்று பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பின் வரைவில் தெளிவாக எழுதியுள்ளார். நாட்டின் முதல் துணைக் குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1952 மே 16 அன்று, ‘நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அதாவது, நான் எல்லா கட்சிகளுடனும் தொடர்புடையவன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்று மாநிலங்களவைத் தலைவர் காட்டும் பாரபட்சமான போக்கினால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடந்து கொண்ட விதம் அவரது பதவிக்கு எதிரானது. சிலசமயங்களில் அரசாங்கத்தைப் புகழ்ந்து பாராட்டுகளை வாசிக்கத் தொடங்குகிறார். சில சமயங்களில் தன்னை ஆர்எஸ்எஸ்ஸின் ஏகலைவன் என்று கூறிக்கொள்கிறார். இம்மாதிரியான பேச்சு அவருடைய பதவிக்கு ஏற்புடையது அல்ல.
சபைக்குள் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை அவர், தனது எதிரிகளாகப் பார்க்கிறார். மூத்தவராக இருந்தாலும் சரி, இளையவராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சித் தலைவர்களை ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறி அவமதிக்கிறார். சபையில் நீண்ட அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பல தொழில்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் என பலர் சபையில் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரைப் போல சபையின் உறுப்பினர்களுக்கு ஜக்தீப் தன்கர் உபதேசம் செய்கிறார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையில் 5 நிமிடம் பேசினால், சபாநாயகரே 10 நிமிடம் பேசுகிறார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையில் பேசவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு மரபுகளை விட ஆளும் கட்சிக்கே விசுவாசமானவராக மாநிலங்களவைத் தலைவர் உள்ளார். அவர் தனது அடுத்த பதவி உயர்வுக்கான அரசாங்க செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறார்.
மாநிலங்களவையில் குழப்பம் விளைவிப்பவர் அதன் தலைவர்தான் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவர் மற்றவர்களுக்கு பாடம் கற்பித்து, மீண்டும் மீண்டும் இடையூறுகளை உருவாக்குகிறார். சபையை முடக்குவதற்கான முயற்சிகள் ஆளுங்கட்சியிடமிருந்தும் சபாநாயகரிடமிருந்தும் அதிகமாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
பொதுவாக எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் தலைவரிடம் பாதுகாப்பு கோரும். ஏனெனில், அவர்தான் எதிர்க்கட்சியின் பாதுகாவலர். ஆனால், அவரே ஆளுங்கட்சியையும், பிரதமரையும் புகழ்ந்து பேசுகிறார் என்றால், எதிர்க்கட்சிகளின் பேச்சை யார் கேட்பது? மாநிலங்களவைத் தலைவர் எங்களை கவனிக்காமல், ஆளுங்கட்சியினரை பேசுமாறு சைகை காட்டுகிறார். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்விகள் கேட்டால் அதற்கு பதில் சொல்லும் முன்னரே ஆளும் கட்சிக்கு மாநிலங்களவைத் தலைவர் கேடயமாக நிற்கிறார்.
மாநிலங்களவைத் தலைவரின் நடத்தை நாட்டின் கண்ணியத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டிய நிலைமையை அவர் கொண்டு வந்துள்ளார். அவருடன் எங்களுக்கு தனிப்பட்ட பகையோ அரசியல் வெறுப்போ கிடையாது. நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் நோக்கத்தில் ஆழ்ந்த யோசனையுடனும் கட்டாயத்துடனும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.