மும்பையில் நேற்று முன் தினம் இரவு நடந்த பஸ் விபத்து மும்பையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 42 பேர் காயம் அடைந்தனர். விபத்தின் போது கண்மூடித்தனமாக பாதசாரிகள் மீது பஸ் மோதிக்கொண்டிருந்த போது கர்ப்பிணி பெண் ஒருவர் தனது மகளை சாமர்த்தியமாக காப்பாற்றினார்.
நஜ்மா ஷேக்(35) என்ற கர்ப்பிணி பெண் தனது 4 வயது மகள் அஸ்மத் மற்றும் தனது வயதான பெற்றோருடன் ஷாப்பிங் சென்றபோது இந்த விபத்து நடந்தது. இது குறித்து நஜ்மா ஷேக் கூறுகையில், ”பஸ் ஒன்று எங்களை நோக்கி வந்தது. உடனே என்னுடன் இருந்த எனது மகளை பிடித்து தள்ளிவிட்டேன். பஸ் டாக்சி ஒன்றின் மீது மோதிய பிறகு எனது பெற்றோர் மீது மோதியது. என் மீதும் பஸ்சின் ஒரு பகுதி இடித்துவிட்டது. இதில் நான் கீழே விழுந்து மயக்கம் அடைந்துவிட்டேன்.
கண் விழித்தபோது எனது மகள் மற்றும் பெற்றோரை தேடினேன். எனது மகள் பாதுகாப்பாக லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். ஆனால் எனது பெற்றோர் பலத்த காயத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
நூலிழையில் உயிர் தப்பிய டாக்சி டிரைவர் குடும்பம்
டாக்சி டிரைவர் அன்சாரியும், அவரது குடும்பத்தினரும் பஸ் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினர். இது குறித்து அன்சாரி கூறுகையில்,”வழக்கமாக நான் டாக்சி ஓட்டி முடித்த பிறகு வண்டியை நிறுத்துவதற்கு முன்பு எனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு ஒரு சிறிய பயணம் செல்வது வழக்கம். விபத்து நடந்த அன்று நான் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து எனது மனைவி மற்றும் மகளை அழைப்பதற்காக சென்றேன்.
நான் வீட்டிற்கு சென்ற போது பெரிய சத்தம் கேட்டது. நான் ஓடி வந்து பார்த்தபோது எனது கார் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு பஸ் மோதி சேதம் அடைந்திருந்தது”என்றார்.
அன்சாரியின் டாக்சி மற்றும் விபத்தை ஏற்படுத்திய பஸ் இடையே சிக்கி கனிஷா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட குர்லாவில் உள்ள பாபா மருத்துவமனையில் காயம் அடைந்த பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்கள் மருத்துவமனையில் போதிய வசதி இல்லை இல்லை என்று குற்றம் சாட்டி இருக்கின்றனர். அருகில் உள்ள சயான் மருத்துவமனை மாற்றவேண்டும் என்று காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட பஸ்களால் விபத்து
மும்பையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெஸ்ட் நிர்வாகம் பொதுபோக்குவரத்தை இயக்கி வருகிறது. செலவை கட்டுப்படுத்துவதற்காக பெஸ்ட் நிர்வாகம் பஸ்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. டிரைவருடன் கூடிய பஸ்களை தனியார் ஒப்பந்ததாரர்கள் வழங்குகின்றனர். நடத்துனரை பெஸ்ட் நிர்வாகம் வழங்கும். மும்பையில் தற்போது 1800 பஸ்கள் குத்தகைக்கு பெறப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலானவை ஏ.சி. எலக்ட்ரிக் பஸ்கள் ஆகும். 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த குத்தகை பஸ்கள்தான் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. பஸ்களை குத்தகைக்கு எடுத்து இயக்க பெஸ்ட் பஸ் தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குத்தகை பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.