சென்னை: கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்: முல்லை பெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுக்கிறது. தற்போதும் முல்லை பெரியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட தளவாட பொருட்களை கேரள வனத் துறையினர் அனுமதிக்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல்.
இதை கண்டித்து தமிழகத்தில் 4 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், திமுக அரசு அமைதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் நினைவகத்தை திறக்க கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், விழா மேடையிலேயே, முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அதிகாரிகள் இடையூறு செய்வதை சுட்டிக்காட்டி, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதற்கு அவர்கள் செவிசாய்க்காத பட்சத்தில், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
டிடிவி தினகரன்: முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கும் கேரள அரசு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கார் பார்க்கிங் அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதுமான நீரின்றி கருகிய நிலையிலும், கடந்த ஆண்டு பெங்களூரு சென்று கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், காவிரி நீரை திறந்துவிடுமாறு அம்மாநில முதல்வரை வலியுறுத்தாமல் திரும்பினார். அதுபோல இல்லாமல், இந்த முறை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுமுக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளபடி, அவரது கேரள பயணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர், பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.