கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மயில்சாமி. விவசாயியான இவர் திருமணத்துக்காக வரன்களைத் தேடியுள்ளார். இதற்காக பல்வேறு மேட்ரி மோனி ஆப்பில் விவரங்களை பதிவு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் தன் விவரங்களை மேட்ரி மோனி ஆப்பில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு மயில்சாமி, பிரியா பேசத் தொடங்கியுள்ளனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனதால் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். ஒருமுறை பிரியா, “தனது அக்காவுக்கு மிகவும் உடல் நலம் சரியில்லை. மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும்.” என்று மயில்சாமியிடம் கேட்டுள்ளார்.
மயில்சாமியும் பணம் கொடுத்துள்ளார். இதே பாணியில் பிரியா அடிக்கடி பணம் கேட்டு வாங்கியுள்ளார். மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் ரூ. 7.12 லட்சம் பிரியாவுக்கு கொடுத்துள்ளார். பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, பிரியா திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதால் மயில்சாமி அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
பிரியா கொடுத்த முகவரிக்கு நேரடியாக சென்று பார்த்துள்ளார். அப்போது அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மயில்சாமி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், பிரியா சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறை சேலம் விரைந்து பிரியாவை கைது செய்தனர். பிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரியா ஏற்கெனவே மூன்று முறை திருமணமானவர். முதல் கணவர் உயிரிழந்துவிட, இரண்டாவது கணவரை விவகாரத்து செய்துள்ளார்.
மூன்றாவது கணவரை பிரிந்து, கடந்த சில மாதங்களாக சேலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இவர் மேட்ரிமோனி ஆப்பில் முகவரி, சாதி குறித்து தவறான தகவல்களை பதிவு செய்து, பல ஆண்களை ஏமாற்றியுள்ளார். இதே பாணியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.