‘மேற்குவங்கத்தில் பாபர் மசூதி கட்டப்படும்’ – திரிணமூல் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். இதன் பணி முர்ஷிதாபாத்தில் வரும் டிசம்பர் 6, 2025 இல் துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்ட அங்கிருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கடந்த நவம்பர் 9, 2019 இன் இந்த தீர்ப்பில், அயோத்திக்கு அருகில் பாபர் மசூதி கட்டவும் நிலம் ஒதுக்கவும் உத்தரவானது. இதையடுத்து உபி அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் அதன் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.

இந்நிலையில், பாபர் மசூதி மேற்கு வங்க மாநில முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்காவில் கட்டப்பட வேண்டும் என குரல் எழுந்துள்ளது. இதை அம்மாநிலம் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார்.

இது குறித்து எம்எல்ஏவான கபீர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் 34 சதவிகிதம் உள்ளனர். இங்கு அவர்கள் தலைநிமிர்ந்து பெருமையுடன் வாழ வேண்டும். இது முஸ்லிம்களின் உரிமை. இதற்காக நான் ஒன்றை முன்மொழிய விரும்புகிறேன். பெல்தங்காவில் வரும் டிசம்பர் 6, 2025 ஆம் ஆண்டுக்குள் 2 ஏக்கர் நிலத்தில் பாபர் மசூதியின் பணிகள் துவங்கும்.

சுமார் 90 சதவிகித முஸ்லிம்கள் வாழும் பெல்காவில் மசூதிக்காக 100 பேர் கொண்ட ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும். மசூதிக்காக பணப்பற்றாக்குறை இருக்காது. இதை கட்டுவதற்காக நான் ரூ.1 கோடி நன்கொடை அளிக்க உள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

முர்ஷிதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பரத்பூர் தொகுதி எம்எல்ஏவாக ஹுமாயூன் வகிக்கிறார். இவர் இங்கு முதன்முறையாக 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேர்வாகி தொடர்ந்து வென்று வருகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹுமாயூன், ‘தொடர்ந்து பாஜகவினர் தம் ஆக்ரோஷத்தை காட்டினால் அவர்களை இல்லாமல் செய்ய வேண்டி வரும். இரண்டு மணி நேரத்தில் அனைவரையும் வெட்டி அருகிலுள்ள பாகீரதி நதியில் வீச வேண்டி வரும்.’ எனப் பேசி வழக்கில் சிக்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.