India vs Australia, Gabba Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மோதி வருகின்றன. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையை அடைந்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வரும் டிச.14ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி கடந்த அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி சுமாராகவே விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்கள் என குறைவான ஸ்கோரையே இந்திய அணி எடுத்தது. ஆஸ்திரேலியா 337 ரன்கள் அடித்த நிலையில், அதில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களை அடித்தார் எனலாம். அவரை ஆட்டமிழக்க செய்ய இந்திய வேகப்பந்துவீச்சாளர் படையால் இயலவில்லை. எனவே, வரும் போட்டிகளில் வேகபந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
பலம் பெறுமா வேகப்பந்துவீச்சு?
பேட்டிங்கில் ரன் வேண்டும் என்றாலும் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டிய சூழல் ஆஸ்திரேலியாவில் வழக்கமானது. அந்த வகையில், உங்களின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவது கஷ்டம். தொடர்ச்சியாக சிறப்பான லைன் மற்றும் லெந்தில் போடுவதில் கை தேர்ந்தவராக இருந்தால்தான் ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகையை சூடலாம். பும்ரா அப்படி பந்துவீசினாலும் சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா அவர்களுக்கு சரியான துணையாக அமையவில்லை.
ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருந்தாலும் கூட அவர்களும் சிராஜ், ராணாவுக்கு ஒத்தவர்கள்தான். இதில் சிராஜ் மட்டுமே ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் பும்ரா உடன் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கு முகமது ஷமி வரவழைக்கப்படுவார் என கூறப்பட்டது. டிச. 26ஆம் தேதி தொடங்கும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஷமி விளையாட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இதுகுறித்து அடிலெய்ட் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஷமியின் உடற்தகுதியை தொடர்ந்து பிசிசிஐ குழு கண்காணித்து வருகிறது என்றும் அங்கிருந்து அப்டேட் வந்ததும் தக்க நேரத்தில் அறிவிப்போம் என்றும் கூறினார். மேலும், சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் போதும் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாகவும், முழு உடற்தகுதியில்லாமல் இங்கு வரவழைத்து அவரை மேலும் அழுத்தத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை எனவும் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.
ஷமி வர மாட்டார்
இந்நிலையில், விசா உட்பட அனைத்தும் ரெடியாக இருக்கிறது, உடற்தகுதி மட்டும் பிசிசிஐ குழுவால் ஏற்கப்பட்டுவிட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு பறப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவிற்கு முழுமையான உடற்தகுதியை அவர் பெறவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு ரஞ்சி கோப்பையிலும் தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் விளையாடி வருகிறார். இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் முகமது ஷமியின் வங்காள அணி, பரோடா அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 43 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.