நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர், கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்த படியே பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து இவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. சர்வதேச கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறிய அவர்கள், மும்பையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும், அதே பார்சலில் உங்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவை இருப்பதால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறி மிரட்டியுள்ளனர். மேலும் மும்பை சைபர் கிரைம் போலீஸிடம் இருந்து அழைப்பு வரும் என இணைப்பைத் துண்டித்துள்ளனர்.
சிறிது நேரத்திலேயே ஸ்கைப் மூலம் காணொளி வாயிலாகப் பெண்ணிடம் தொடர்புகொண்ட சிலர் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை முடியும் வரை இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே போனாலோ அல்லது வேறு யாரிடமும் தகவலைப் பகிர்ந்தால் சிக்கல் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். இதற்குப் பயந்து 8 நாட்களாக முறையான உணவு, தூக்கம் இல்லாமலும் இயற்கை உபாதைகளுக்குக் கூட முறையாகச் செல்ல முடியாமலும் தனி அறையில் தவித்து வந்திருக்கிறார். கடைசியாக அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்த பணம் முழுவதையும் அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
விசாரணை முடிந்ததும் திருப்பிச் செலுத்தப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, 16 லட்சம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார் அந்த பெண். உடனடியாக ஸ்கைப் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டு அந்த பெண் முயன்றும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை மிகவும் தாமாக அறிந்து, நீலகிரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன மோசடி குறித்துத் தெரிவித்த சைப் கிரைம் போலீஸார், “டிஜிட்டல் கைது என்ற பெயரில் வீடியோ இணைப்பில் தோன்றி துன்புறுத்தி பணம் பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீலகிரியில் மட்டுமே இந்த ஆண்டு டிஜிட்டல் கைது என்று கூறி மிரட்டிய விவகாரம் தொடர்பாக 28 புகார்கள் பதிவாகியிருக்கிறது. 68 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…