IND vs AUS: 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்த அதிரடி மாற்றம்! பிளேயிங் 11 இதுதான்!

அடிலெய்டு ஓவலில் நடந்த பிங்க்-பால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி பெரிய தோல்வியை சந்தித்தது. 2 இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்த நிலையில்,  ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அடுத்த போட்டி வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய கோட்டையான கப்பாவில் நடைபெறுகிறது. கடைசியாக 2021ல் கப்பாவில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மேலும் இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியாவிற்கு இந்த வெற்றி அவசியம் தேவை.

அடிலெய்டில் தோல்வியடைந்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் WTC பைனல் செல்லும் கனவை தகர்த்துவிடும். இந்நிலையில் 3வது டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் அணி நிர்வாகிகள் உள்ளனர். எனவே கப்பா டெஸ்டில் அணியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் களமிறங்கினார். ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் இது இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. எனவே மீண்டும் ரோஹித் சர்மா டாப் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லாததால் ஓப்பனிங் இறங்கிய ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். ஆனால் 2வது டெஸ்டில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ராகுல் அடிலெய்டில் முதல் இன்னிங்ஸில் 64 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார், ஆனால் 2வது இன்னிங்சில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த இடங்களில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷுப்மான் கில், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் டாப் ஆர்டரிலும், நிதீஷ் குமார் ரெட்டி ஆல் ரவுண்டராகவும் விளையாட உள்ளனர். அதே போல அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2வது டெஸ்டில் அஸ்வின் விளையாடினாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. அதே சமயம் கப்பாவில் சுந்தர் சிறப்பாக விளையாடி உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசி இருந்தாலும், அடிலெய்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. அவரால் எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை. எனவே 3வது டெஸ்டில் ஆகாஷ் தீப் விளையாட வாய்ப்புள்ளது. மேலும் பிரசித் கிருஷ்ணாவையும் எடுக்கலாமா என்ற பேச்சுவார்த்தையில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.

கபா டெஸ்டுக்கான இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் 11:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.