வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2025-ம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பின்போது, 281 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 140 எம்.பி.க்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.
இதன்படி இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் இருப்பை அதிகரிப்பது, ராணுவ ஊதியத்தை அதிகரிப்பது, ஏழு புதிய கப்பல்களை உருவாக்குவது மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் ராணுவ பட்ஜெட்டில் இடம்பெற உள்ளன. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அடுத்ததாக செனட் சபையின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும்.
இது குறித்து சபாநாயகர் மைக் ஜான்சன் கூறுகையில், “அமெரிக்காவையும், அதன் நலன்களையும் பாதுகாக்கும் முக்கிய ராணுவ பணிகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தும். இது ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வில் சிறப்புமிக்க முதலீடுகளை செய்யும்” என்று தெரிவித்தார்.