ஸ்கார்பீன் ரகத்தின் 6-வது மற்றும் கடைசி போர்க்கப்பல் மற்றும் நீலகிரி ரகத்தின் முதல் போர்க்கப்பல் ஆகியவை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரியில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்த 2 கப்பல்களும் இந்த மாதமே கடற்படையில் சேர்க்கப்பட இருந்ததாகவும் பின்னர் இது தள்ளி வைக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ், ஸ்கார்பீன் ரகத்தைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிகளை வாங்க பிரான்ஸின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்திய கடற்படை கடந்த 2005-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, பிரான்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையைச் சேர்ந்த மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் இந்தக் கப்பலை கட்டியது.
ஸ்கார்பீன் என்பது பிரெஞ்ச் பெயர் ஆகும். இந்திய கடற்படை இதற்கு கல்வாரி ரக கப்பல் என பெயரிட்டுள்ளது. ஏற்கெனவை 5 கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன.
இறுதி மற்றும் 6-வது போர்க்கப்பல் வக் ஷீர் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் கடலில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்தக் கப்பல் வரும் ஜனவரி மாதம் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
2 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பல், பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. இது கடலின் மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் இருந்து போரிடுதல், நீண்ட தூர தாக்குதல், உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நீர்மூழ்கியிலும் 6 ஆயுதங்களை ஏவும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டார்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகள் உட்பட 18 ஆயுதங்களைக் கொண்டுள்ளன.
நீலகிரி ரக கப்பல்: புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், நீலகிரி ரக வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல்களும் மசகான் டாக் துறைமுகத்தில் கட்டுமானத்தில் உள்ளன. மொத்தம் 7 கப்பல்கள் கட்டப்பட உள்ளன. இதில் முதல் கப்பல் வரும் ஜனவரி மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.