புனரமைக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது
அமெரிக்க அரசின் உதவியுடன் புணர் நிர்மாணிக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் என்பன கடந்த 11ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் (Julie J.Chung) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினர்.
தொல்பொருளியல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், அமெரிக்க தூதுவரின் நிதியுதவியுடன் 77 மில்லியன் (265,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் இந்த வளாகம் புணரமைக்கப்பட்டது.
கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க, தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.