பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சட்டப்பேரவையில் (சுவர்ண சவுதா) குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2ஏ பிரிவில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பஞ்சமசாலி லிங்காயத்து பிரிவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலசங்கம பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெயமிருதஞ்ஜெய சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஊர்வலமாக சென்ற அவர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றனர்.
கல்வீச்சு: அப்போது போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது சிலர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக பெலகாவியில் பஞ்சமசாலி மடாதிபதி ஜெயமிருதஞ்ஜெய சுவாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”லிங்காயத்து பிரிவில் எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். எங்கள் பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2 ஏ பிரிவின் கீழ் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகிறோம். ஆனால் கர்நாடக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது.
கடந்த தேர்தலில் எங்களின் கோரிக்கையை ஏற்பதாக வாக்குறுதி அளித்ததால் நாங்கள் காங்கிரஸை ஆதரித்தோம். தேர்தலில் வென்ற பின்னர் காங்கிரஸ் அரசு எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. முதல்வர் சித்தராமையா எங்கள் பிரிவினருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார். எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை சட்டப்பேரவை முன்பாக போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என்றார்.