கீவ்,
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரின் தொடக்கத்தில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதே சமயம் உக்ரைனுக்கு பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷிய ராணுவம் இன்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ தெரிவித்துள்ளார். அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் உக்ரைனின் வான்பரப்பில் பல்வேறு முறை ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் மேற்கு பகுதிகளில் பாலிஸ்டிக் கின்ஸால்(Kinzhal) ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.