வடக்கு கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள கிராமம் மரோட்டிசல். இந்தியாவின் செஸ் கிராமம் என அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த செஸ் வீரர்கள் யாரும் இங்கு பிறந்திருக்கவில்லை. ஆனாலும் இதுதான் செஸ் கிராமம். ஏனெனில் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த கிராமத்தை நல்வாழ்வுக்கு திருப்பி அழைத்துவந்தது செஸ் விளையாட்டுதான்.
6ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த விளையாட்டு ஒரு கிராமத்தின் மாற்றத்தில் பங்கு கொண்டது எப்படி?
மரோட்டிசலில் எந்த பக்கம் திரும்பினாலும் இரண்டு நபர்கள் உன்னிப்பாக செஸ் போர்டை வெறித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
அது ஒரு அண்ணன் – தம்பியாக, அக்கா – தங்கையாக, உறவினர்களாக, நண்பர்களாக, தாத்தா – பேத்தியாக, பாட்டி – பேரனாக இருக்கலாம்.
தொலைக்காட்சி, மொபைல் திரைகளுக்குப் பதிலாக இவர்களது கண்கள் செஸ் போர்டை உற்றுநோக்குகின்றன. இந்த கிராமத்தில் எல்லாரும் ஒற்றுமையாக இந்த விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றனர்.
அந்த விளையாட்டு அவர்களது கவனத்தை மேம்படுத்துகிறது. அவர்களை திறன்மிக்க மனிதர்களாக்குகிறது. அவர்களை ஒரு சமூகமாக உருவாக்குகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு மரோட்டிசல் கூட பிற இந்திய கிராமங்களைப் போலவே இருந்தது. குடிப்பழக்கமும் சூதாட்டமும் மக்களை வேதனையில் ஆழ்த்தியிருந்தது.
ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த கிராமத்தில் முதன்முதலாக Chess விளையாடக் கற்றுக்கொண்டவர். அவர் கல்லூரி முடித்து ஊருக்கு திரும்பியபோது தனது ஊரின் மோசமான நிலைக் குறித்து வருந்தினார்.
இதனை மாற்ற ஒவ்வொருத்தருக்கும் செஸ் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தார். உலகம் முழுவதும் கொரோனா பரவியதை விட வேகமாக இங்கு செஸ் விளையாட்டு பரவியது.
மதுவையும், சூதாட்டத்தையும் விட உற்சாகமளிப்பதாகவும் இருந்தது. ஊரின் முக்கிய இடங்களில் எல்லாம் உட்கார்ந்து விளையாடினர்.
பேருந்து நிலையம், தேநீர் கடை, பள்ளிக் கூடம், வீடுகளின் முற்றங்கள் எல்லாம் விளையாட்டு அரங்கமானது. போட்டியிடுபவர்களை சுற்றி ஒருக் கூட்டம் வேடிக்கைப் பார்த்தபடி இருக்கும்.
இப்போது இந்த செஸ் விளையாட்டு இந்த ஊரின் அடையாளமாக மாறிவிட்டது. இந்தியாவில் எந்த ஒரு கிராமத்திலும் 50க்கு மேல் செஸ் விளையாட தெரிந்தவர்களைப் பார்க்க முடியாது. ஆனால் இந்த கிராமத்தில் 4000 முதல் 6000 வீரர்கள் இருக்கின்றனர்.
இந்த கிராமத்து பள்ளியில் செஸ்ஸை ஒரு சிறப்பு பாடமாக சேர்க்க வேண்டும் என அந்த கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
மரோட்டிசல் சுற்றிப்பார்க்கவும் ஏற்ற இடமாக உள்ளது. பசுமையான இந்த கிராமத்தில் நீர்வீழ்ச்சி உள்ளது. திருச்சூர் செல்பவர்கள் நிச்சயமாக ஒரு விசிட் அடிக்கலாம்!