சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சாலை விபத்து குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். வாகன ஓட்டிகள் சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. சிலர் சிவப்பு சமிக்ஞையை மதிப்பதே இல்லை.
சாலை விபத்து மரணங்களில் உத்தர பிரதேசம் ஒட்டுமொத்த உயிரிழப்பில் 13.7 சதவீதத்துடன் (23,000) முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 10.5 சதவீதத்துடன் (18,000) 2-ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா (15,000), மத்திய பிரதேசம் (13,000) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நகரங்களைப் பொருத்தவரை டெல்லி 1,400 பேருடன் முதடலிடத்தில் உள்ளது. பெங்களூரு (915), ஜெய்ப்பூர் (850) ஆகியவை 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.