சென்னை: மருத்துவமனையில் பத்திரிகையாளரைத் தாக்கிய போலீஸ் அதிகாரி; பதிவான FIR… நடந்தது என்ன?

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (Press Trust of India) ஊடகத்தின் பத்திரிகையாளர் பாலசுப்ரமணியன் என்பவர், உடல்நிலை சரியில்லாத தனது மகனை நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது, மகனுக்கு மருந்து வாங்க ஃபார்மஸியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பாலசுப்ரமணியன், போலீஸ் காரில் அங்கு வந்த ஒருவர் நேராக மருந்து வாங்க முற்பட்டபோது `இத்தனைப் பேர் வரிசையில் நிற்கிறோம்’ என்று கேள்விகேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை

அதைத்தொடர்ந்து, அந்த நபர் வந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவத்தையறிந்த சென்னை பிரஸ் கிளப், சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், இந்த சம்பவம் தங்கள் தொகுதியில் நடந்திருக்கிறது என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்தது.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் பாலசுப்ரமணியனிடம் பேசியபோது, “நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத என் மகனை அழைத்துக்கொண்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு, சுமார் 40 நிமிடங்கள் மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன் நான்கைந்து பேர் இருந்தபோது, போலீஸ் காரிலிருந்து சாதாரண உடையில் வந்த ஒருவர் நேராக கவுன்ட்டரில் மருந்து வாங்கச் சென்றார். இவ்வளவு பேர் நிற்கிறோம் என்று சொன்னபோது, காரில் எஸ்.பி காத்திருக்கிறார் என்றார்.

ஓமந்தூரார் மருத்துவமனை

பின்னர்,காரில் அப்படி யாரும் இருப்பது போல தெரியவில்லை என்று கோரியபோது, `ஒரு சாவு விழுந்துடுச்சு எடுத்துப் போட போறேன், நீ வந்து எடுத்து போடுவியா’ என்று ஒருமையில் அநாகரிகமாகப் பேசினார். அதற்கு,`எனக்கும் வேலை இருக்கிறது என் வேலையை நீ செய்வியா’ என்று திரும்பக் கேட்டபோது இரண்டு மூன்று முறை அறைந்துவிட்டு மருந்து வாங்கினார். உடனடியாக அவர் வந்த காரை செல்போனில் படமெடுத்தேன். மீண்டும், வந்து செருப்பால் என்னை அடித்ததும், அவர் காரின் முன் தரையில் அமர்ந்துவிட்டேன். பிறகு, அங்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களும் என்னவென்று சத்தம் போட, அவர் கரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் காவல் நிலையத்துக்கு வந்து புகாரளிக்குமாரு கூறிய பிறகு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தையும், அந்த நபர் வந்த காரின் பதிவு எண்ணையும் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமாகப் புகாரளித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். நேற்று இன்ஸ்பெக்டர் அழைத்த பிறகு காவல் நிலையத்துக்கு நேரில் சென்றேன். அந்த வாகனம் சைபர் கிரைம் போலீஸுடையது என்று ஆர்.டி.ஓ மூலம் தெரியவந்தது. அந்தக் காரில் இருந்தது சைபர் கிரைம் டி.எஸ்.பி தெய்வேந்திரன்.

பத்திரிகையாளரின் புகார்

அந்த சம்பவம் நடந்தபோது அவர் வந்து தடுக்கவேயில்லை. என்னைத் தாக்கியவரின் பெயர் கான்ஸ்டபிள் முத்துக்குமரன். இவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு, `நான் ரிப்போர்ட்டர் என்பதால் மன்னிப்பு கேட்கிறீர்கள். இதுவே சாமானிய மனிதனாக இருந்திருந்தால், போலீஸில் புகாரளித்து உங்களையெல்லாம் எதிர்கொண்டிருக்க முடியுமா’ என்று கூறி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு என்னவென்று தெரியும்.” எனக் கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.