தஞ்சாவூர்/ கும்பகோணம்/ நாகப்பட்டினம்/ திருவாரூர்/ மயிலாடுதுறை/ காரைக்கால்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய இடைவிடாது மழை பெய்ததால், பொதுமக்கள் பலரும் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலவெளி ஊராட்சியில் பாலகிருஷ்ணாநகர் விரிவாக்கம், சக்தி நகர் குடியிருப்பு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலக்கடலை விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல, சம்பாவில் பூக்கும் தருணத்தில் உள்ள நெற்பயிருக்கு பாதிப்பையும், தாளடி பயிரில் பூச்சித் தாக்குதலையும் ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சன்னாசி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. சாத்தனூரில் வெள்ளாளர் தெருவில் உள்ள சுகந்தியின் ஓட்டு வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து விழுந்து சேதமானது. கும்பகோணம் பழைய பேருந்து நிலையம், பெருமாண்டி பிரதானச் சாலை, மடத்துத் தெரு,காந்தி பூங்கா சாலை, மாதப்பா தெரு, பூக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் தேங்கியது.
கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் இருந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அங்கு சென்று, உடனடியாக மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தார். பாபநாசம் வட்டம் கோவிலாம் பூண்டியைச் சேர்ந்த ச.ராதிகா, பசுபதிகோவில் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மெல்கோ ஆகியோரின் வீடுகளில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. புள்ளபூதங்குடி கீழத் தெருவில் பழமையான ஓட்டுவீட்டின் முன்பக்க சுவர் நேற்று இடிந்து விழுந்தது.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவித்தது. ஆனால், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று காலை 8 மணிக்கு மேல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தது. ஆனால், வெளியூரில் இருந்து கும்பகோணம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு முன்னதாகவே வந்த மாணவ, மாணவிகள் வேறு வழியில்லாமல் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார் கோவில், தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. கடலோர கிராமங்களில் காற்று வேகமாக வீசியது. இதனால், சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. முக்கிய கடை வீதிகள், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், கனமழை தொடர்ந்து நீடித்தால், நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று மதியம் 2.30 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): மயிலாடுதுறை 165.70, செம்பனார்கோவில் 158, மணல்மேடு 139, தரங்கம்பாடி 98.60, சீர்காழி 86.20, கொள்ளிடம் 52.40. காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு, திருப்பட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்டபகுதிகளில் கனமழை பெய்தது. காரைக்காலில் 90 மி.மீ. மழை பதிவானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. 2 மாவட்ட மீனவர்களும் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில், நேற்று பகலில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக கோடியக்கரையில் 180 மில்லிமீட்டர் மழை பதிவானது. தலைஞாயிறில் 140 மி.மீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக நாகை நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பால்பண்ணைச் சேரி நீர்த்தேக்கத் தொட்டி சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. மேலும், அப்பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் உள்ளது. மழையால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வேளாங்கண்ணி செபஸ் தியார் நகர், பூக்காரத் தெரு சுனாமி குடியிருப்புகள் உள்ள சாலையில் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கு ராட்சத இன்ஜின் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை, ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது ஆட்சியர் தெரிவித்தது: தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, விடிய, விடிய மழை பெய்தது. நேற்றும் மழை தொடர்ந்ததால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தாலும், விட்டு விட்டு மழை பெய்வதால், மழைநீர் வடிவதற்கு வாய்ப்பாக உள்ளது. ஆனால், உழனி நாரணமங்கலம், மாங்குடி, வடகரை, நடுவப்படாகை, சேர்ந்தனாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் 750 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், நெற்பயிர்கள் பாதிப்படையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.