போடி: தொடர் மழைக்கு போடிமெட்டு மலைச்சாலையில் இரண்டு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தன. இயந்திரத்தால் இவற்றை அகற்ற முடியவில்லை. ஆகவே துளையிட்டு சிறு பாறைகளாக்கி இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு அமைந்துள்ளது. போடி அருகே முந்தலில் இருந்து 20 கிமீ. தொலைவில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் இந்த மலைப் பாதை உள்ளது. சர்வதேச சுற்றுலா தளமான மூணாறுக்குச் செல்லும் பிரதான சாலையும் இதுதான். இதனால் ஏராளமான வாகனங்கள் இந்த வனச்சாலையை 24 மணி நேரமும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
இருப்பினும் மழைநேரங்களில் இப்பாதை அபாயகரமானதாகவே உள்ளது. மண் திட்டுக்கள் மற்றும் பாறைகள் பல இடங்களில் சரிந்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்கு தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைச்சாலையின் பல இடங்களிலும் லேசான மண் சரிவும், சிறு கற்களும் பெயர்ந்து விழுந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று (டிச.12) நள்ளிரவு 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத பாறைகள் இரண்டு மலை உச்சியில் இருந்து சரிந்து சாலையில் வந்து விழுந்தன. அப்போது வாகனங்கள் அப்பகுதியில் செல்லாததால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. சாலையின் பெரும் பகுதியை இப்பாறைகள் மறைத்து கிடப்பதால் ஓரத்திலேயே தற்போது வாகனங்கள் மெதுவாக கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “வழக்கமாக சிறிய கற்பாறைகள், மண்திட்டுக்கள் சரிந்து விழும். இயந்திரம் மூலம் எளிதில் அகற்றி போக்குவரத்தை சரி செய்வோம். இது பிரமாண்டமாக இருப்பதால் மண் அள்ளும் இயந்திரத்தால் அகற்ற முடியவில்லை. துளையிடும் இயந்திரம் மூலம் இவற்றை உடைத்துத்தான் அகற்ற முடியும்” என்றனர்.