நடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது: காங்கிரசை சாடிய பி.ஆர்.எஸ் தலைவர்

ஐதராபாத்,

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது என ஆளும் காங்கிரசை பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமாராவ் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது முழு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் உண்மையில் யார் தோல்வியுற்றார்?. ஒரு தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்டக் காட்சியாகும். நடிகர் அல்லு அர்ஜுனை ஒரு பொதுக் குற்றவாளியாக கருதுவது அவசியமற்றது மற்றும் பொருத்தமற்றது என்று பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.