ஆந்திராவில் உள்ள அன்னமயா மாவட்டத்தை சேர்ந்த ஆஞ்சநேயா பிரசாத் என்பவர், குவைத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அவர் தனது மனைவியையும் குவைத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். அவரது படிப்பை கருத்தில் கொண்டு தனது மகளை ஆந்திராவில் உள்ள தனது அத்தை வீட்டில் விட்டிருந்தார். ஆனால் சிறிது நாள் கழித்து தனது அத்தையையும் குவைத்திற்கு அழைத்துக்கொண்ட பிரசாத், தனது மகளை தனது மனைவியின் சகோதரி வீட்டில் விட்டிருந்தார். ஆனால் அவர் சில காலம் பார்த்துக்கொண்ட பிறகு குழந்தையை பார்க்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து பிரசாத் மனைவி குவைத்திலிருந்து ஆந்திராவிற்கு வந்தார்.
ஆந்திராவிற்கு வந்து பார்த்தபோது அவர்களின் 12 வயது மகளை அவர்களின் உறவினர் ஒருவர் பாலியல் சித்ரவதை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் குற்றவாளியை எச்சரித்து அனுப்பிவிட்டனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பழிவாங்க பிரசாத் முடிவு செய்தார். இதற்காக குவைத்தில் இருந்து ஆந்திராவிற்கு வந்த பிரசாத் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஞ்சநேயலுவை கொலைசெய்ய சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஆஞ்சநேயலு மாற்றுத்திறனாளியாவார்.
அவர் உறங்கிக்கொண்டிருந்தபோது இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு உடனே துபாய் சென்றுவிட்டார் பிரசாத். போலீஸார் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை. பிரசாத் துபாய் சென்ற பிறகு ஆஞ்சநேயலுவை தான் தான் கொலைசெய்ததாகவும், போலீஸார் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்காததால் தானே இக்காரியத்தில் ஈடுபட்டதாக தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பிறகுதான் இக்கொலையை பிரசாத் செய்திருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.