முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி

தேனி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள, வாகனங்கள் மூலம் கட்டுமானப் பொருள்களை எடுத்து செல்ல கேரள வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது.

தமிழக அரசு பொதுப்பணித் துறையின் சார்பில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஆண்டுதோறும் மராமத்துப் பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி, தேனியிலிருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்குக் கொண்டு சென்றனர்.

சோதனைச் சாவடியில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருள்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சித்தலைவரால், தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளருக்குத் (நீர்வளத்துறை) தகவல் தெரிவிக்கப்பட்டு, கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச் சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லை பெரியாறு அணைப் பகுதிக்குக் கட்டுமான பொருள்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.