2வது டி20: தர்வீஷ் ரசூலி அரைசதம்… ஆப்கானிஸ்தான் 153 ரன்கள் சேர்ப்பு

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என அணி ஜிம்பாப்வே அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் குர்பாஸ் 11 ரன்னிலும், செடிகுல்லா அடல் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஜுபைத் அக்பரி 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தர்வீஷ் ரசூலி மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஓமர்சாய் 28 ரன்னிலும், அடுத்து வந்த முகமது நபி 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய தர்வீஷ் ரசூலி அரைசதம் அடித்த நிலையில் 58 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குல்பைடின் நைப் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் தர்வீஷ் ரசூலி 58 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக ட்ரெவர் குவாண்டு, ரியான் பர்ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.