“இன்சூரன்ஸ் பரவலாக்கல் பற்றி வாய் கிழியப் பேசுகிற அரசாங்கத்தின் லட்சணத்தை ரயில்வே அமைச்சர் அளித்துள்ள பதில் அம்பலப்படுத்துகிறது” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே விபத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது.
1.11.2019இல் இருந்து 31.10.2024 வரை எத்தனை ரயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன? அவற்றில் எத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன? இணையவழி பயணச்சீட்டு பதிவில் எத்தனை பயணிகள் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தனர்? இறந்த பயணிகளின் எத்தனை நியமனதாரர்கள் உரிமங்களைக் கோரியிருந்தனர்? எவ்வளவு பேருக்கு இறப்பு உரிமம் வழங்கப்பட்டது? உரிமம் வழங்கப்படாததற்குக் காரணங்கள் என்ன? ரயில் விபத்துக்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா? அவற்றின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற நிறையக் கேள்விகளை எழுப்பி இருந்தேன்.
என் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை அளிக்கிறது. பொதுவாக கேள்விகளை எழுப்பினால் ஒவ்வொரு கேள்விக்கும் தனியாகப் பதில் அளிப்பதே கேள்வியின் நோக்கத்தை நிறைவு செய்வதாக இருக்கும். இதற்கான வழிகாட்டல்களும் நாடாளுமன்ற ஆவணங்களில் உள்ளன. ஆனால் அமைச்சர் 7 கேள்விகளையும் இணைத்து ஒரே பதிலாக தந்துள்ளார்.

நான் ஐந்து ஆண்டுகளுக்கு விவரங்கள் கேட்டால் அவர் இருபது ஆண்டுகளுக்கு விவரங்களைத் தந்துள்ளார். கூடுதல் விவரங்கள் தானே தந்துள்ளார் என்று நினைக்கலாம். ஆனால் அவரின் நோக்கம் காங்கிரஸ் காலத்தில் நடந்த விபத்துக்களை விட பா.ஜ.க காலத்தில் நடந்தேறியுள்ள விபத்துக்கள் குறைவு என்பதைக் காட்டவே. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி பன்மடங்குப் பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கும்போது இப்படி காலங்களை ஒப்பிடுவது பொறுப்பிலிருந்து தப்பிக்க உதவுமே தவிர பயணிகளின் நலனையும் உயிரையும் பாதுகாப்பதற்கு உதவாது.
நவீனத் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி விபத்துக்களைக் குறைப்பது, உயிர்களைப் பாதுகாப்பது என்பதில் ஒன்றிய அரசு தவறி இருக்கிறது என்பதை மறைப்பதற்குத் தான் இப்படிக் கேட்காத விவரங்களையும் சேர்த்து அமைச்சர் தந்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால், நான் கேட்ட விவரங்களை அவர் தரவில்லை என்பதுதான் உச்சக் கட்டம். 2019 – 24 வரை எவ்வளவு உயிர் இழப்புகள், எவ்வளவு பேருக்குக் காயங்கள் என்பது தனியாக தரப்படவில்லை. 2014 – 15 லிருந்து 2023 – 24 வரை 678 விபத்துக்கள், 748 மரணங்கள், 2087 பேருக்குக் காயங்கள் என்று விவரங்கள் தரப்பட்டுள்ளன.
01.11.2019 லிருந்து 31.10.2024 வரை இவற்றுக்கான இன்சூரன்ஸ் உரிமங்களைக் கோரி பதிவு செய்திருப்பவர்கள் 22 பேர் மட்டுமே, இறப்பு உரிமங்கள் பதிவு ஒன்று கூடச் செய்யப்படவில்லை என்று அமைச்சர் பதிலளித்துள்ளார். இன்சூரன்ஸ் பரவலாக்கல் பற்றி வாய் கிழியப் பேசுகிற அரசாங்கத்தின் லட்சணத்தை இந்த பதில் அம்பலப்படுத்துகிறது. ஏன் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலே இல்லை. பயணிகள் நேரடியாக இணையத்தில் பாலிசி எடுத்துக் கொள்கிறார்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உரிம பட்டுவாடா செய்கின்றன என்று ஒற்றை வரியில் கடந்து சென்றுள்ளார். இதில் அரசுக்குப் பொறுப்பு இல்லையா? இறந்த பயணிகளில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை என்பதைப் பற்றிய தார்மீக உறுத்தல் கொஞ்சம் கூட இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.
விபத்துக்கள் பற்றிய விசாரணையின் விவரங்களும் பொதுவாக தரப்பட்டுள்ளன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பொத்தாம் பொதுவாக “பொருத்தமான நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புக்காக என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, புதிய தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அது போதுமான அளவு உள்ளதா போன்றவை பற்றியெல்லாம் இந்த பதிலில் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
