‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மேலும், ரேவதி (39) உயிரிழந்தது தொடர்பாகவும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக இன்று காலை சிக்கடப்பள்ளி காவல்துறையினர் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்து, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் நிரஞ்சன், தெலங்கானா உயர் நீதிமன்றத்தை நாடினார். மாலை 4 மணி முதல் 6 மணி வரை கிட்டத்தட்ட 2 மணி நேரம் அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனு மீது வழக்கு விசாரணை நடைபெற்றது.
அல்லு அர்ஜூனை அவரது வீட்டில் புகுந்து கைது செய்து, அவருக்கு உடை மாற்றுவதற்குக் கூட அனுமதி வழங்காமல், அவசர அவரமாக காவல்துறை கைது செய்ததாகவும், கைது செய்யும் போது அவருக்கான அடிப்படை உரிமைகளை மறுத்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார் வழக்கறிஞர் நிரஞ்சன்.
மேலும், “கூட்ட நெரிசலால் பெண் பலியானது எதிர்பாராத அசாம்பாவிதம். நடிகரைப் பார்க்க கூட்டம் வந்ததால் அது நடந்தது. அதற்கு அல்லு அர்ஜுன் எப்படி நேரடியாகப் பொறுப்பேற்க முடியும். அல்லு அர்ஜுன் அங்கு வருவது காவல்துறைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் நடந்த உயிரிழப்பிற்கு அல்லு அர்ஜுனை குற்றம்சாட்டி கைது செய்திருப்பது நியாயமற்றது” என்று வாதாடியிருக்கிறார்.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி திருமதி. ஜுவ்வாடி ஶ்ரீதேவி (Justice Juvvadi Sridevi) அவர்கள் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்துப் பேசிய நீதிபதி, “நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவரது உரிமைகளை பறிக்கக் கூடாது. ஒரு குடிமகனாக சுதந்திரமாக வாழ்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவரை கைது செய்து நடத்தியவிதம் சரியாக இல்லை. அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்” என்றார்.
அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.