திரைத்துறையில் இயக்குநராக முயன்றுவரும் நாயகன் வாசுவை (சித்தார்த்) தேடுகிறார்கள் மந்திரி வில்லனின் அடியாட்கள். வாசுவோ கூர்க் மலையில் காஃபி குடித்துவிட்டு கூலாக இந்த விஷயத்தை டீல் செய்கிறார். அப்போது நடக்கும் ஒரு விபத்தில் அவருக்கு சமீபத்திய நிகழ்வுகள் மறந்துபோகின்றன. பின்னர் மாற்றத்துக்காக பெங்களூரு செல்பவர், அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால் மொத்த குடும்பமும் சுப்புலட்சுமி வேண்டாம் எனச் சொல்கிறது. வாசு மறந்துவிட்ட அந்த இரண்டு வருடங்களில் நடந்தவை என்ன, வில்லன் ஆட்களுடன் அவருக்கு என்னதான் பிரச்னை என்பதை விவரிக்கிறது இயக்குநர் என்.ராஜசேகரின் `மிஸ் யூ’.
முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் போய் ‘ஃபிரீ அட்வைஸ்’ கொடுப்பது, எரிச்சலூட்டும் கதாபாத்திரங்களைச் சகித்துக் கொள்வது, காதல், சண்டை இதற்கு நடுவே ‘மறந்ததை நினைக்கிறேன்’ என்பதாகப் பல பரிமாணங்கள் எடுக்கும் கதாபாத்திரத்தில் சித்தார்த். ஆனால் மனதில் நிற்கும் அளவுக்கான பங்களிப்பு மிஸ்ஸிங்! சண்டைக் காட்சிகளில் ஸ்கோர் செய்பவரை காமெடி காட்சிகளில் சுற்றியிருப்பவர்களே கரை சேர்க்கிறார்கள். மாற்றங்கள் நிறைந்த கதாபாத்திரத்துக்குக் குறைசொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத். பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சாஸ்திகா கூட்டணி கிச்சு கிச்சு மூட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் ஆங்காங்கே சிரிப்பும் வருவது பாசிட்டிவான விஷயம்! குறிப்பாக மாறனின் உடல்மொழி ‘குபீர்’. அதேபோல இழுவையாகச் செல்லும் பெங்களூர் காட்சிகளுக்கு ஆறுதலாக இருக்கிறார் கருணாகரன்.
கிரிக்கெட் மைதானத்தில் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பிக்கும் ‘சொன்னாரு நைனா’ பாடல் முடிவதற்குள், ‘மூட் ஸ்விங்’ ஆன வானிலை போல மீண்டும் மீண்டும் பாடல் மழைகள் கொட்டி தீர்க்கின்றன. ஆனால் அவை நம் செவிகளை ஈர்க்காமல் திரைக்கதைக்குப் பாதிப்பை உண்டாக்கிச் செல்கின்றன. சரி, ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசையாவது நிவாரணம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் ‘லேடிஸ் சீட் கிடைக்கல’ என்ற துள்ளல் இசைக்குப் பிறகு டிமிக்கி கொடுத்து டாடா காட்டிச்செல்கிறது. இடைவேளையில் ஒலிக்கும் பின்னணி இசையில் ‘காந்தாரா’ பாதிப்பு ஏனோ?!
திருமண காட்சி, பெங்களூர் அடுக்குமாடிக்குடியிருப்பு பகுதி, பேருந்து பயணம் ஆகிய இடங்களில் ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் ஒரு முழுநீள படத்துக்கான தரமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே ‘விசுக் விசுக்’ எனப் பறக்கும் ட்ரான்சிசன் எஃபெக்ட்ஸ் படத்தொகுப்பில் நெருடலாக இருந்தாலும், முன்னுக்குப் பின் செல்லும் திரைக்கதையைப் புரிந்துகொள்ளும் வண்ணம் கோர்த்த விதத்தில் கவனிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ். இருப்பினும் சுவாரஸ்யம் ‘மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ ஆகும் இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னுமே குறைத்திருக்கலாம். அசோக் குமார் மற்றும் நந்திதா ரமேஷின் ஆடை வடிவமைப்பு வண்ணங்களை அள்ளி வந்திருக்கிறது.
கன்னித்தீவு காலத்திலிருந்து வரும் வழக்கமான கமர்சியல் படத்துக்கான மாஸான ஹிரோ இன்ட்ரோ, ஓப்பனிங் பாடல் என்றே ஆரம்பிக்கிறது படம். அதிலும் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக்கொண்டே பாடும் பாடல் ‘இட்ஸ் வெரி ராங் ப்ரோ’ என்ற மனநிலைக்குக் கொண்டு போகிறது. கிரிஞ்ச் தத்துவங்கள் போடும் சித்தார்த் ஒருபுறம் சோதித்தாலும், ‘லொள்ளு சபா’ மாறன், கருணாகரன், பால சரவணன் ஆகியோர் போடும் ஒன்லைனர்கள் ஆங்காங்கே ஆறுதல் தருகின்றன. ‘லேடீஸ் சீட்’ காட்சியும் சற்றே சிரிக்க வைக்கிறது. சித்தார்த், ஆஷிகா ரங்கநாத்தின் பாத்திரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும் ஒரு தம்பதிக்குள் நடக்கும் சண்டைகள், அதற்கான காரணங்கள் எல்லாம் மிகவும் பலவீனமாக நம்பகத்தன்மையில்லாத மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காமெடி வசனங்களில் ஸ்கோர் செய்யும் வசனக்கர்த்தா ஆர்.அசோக், காதல் மற்றும் தத்துவ ஊசிகள் போடும்போது அதே ‘வைப்’பைத் தர மறுக்கிறார். இடைவேளை காட்சியிலும், அதற்கு முன்னர் பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் செல்லும் காட்சிகளிலும் திரைக்கதை சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், ஒரு எல்லைக்கு மேல் அடுத்து என்ன என்பதை எளிதில் யூகிக்கக்கூடிய காட்சிகள், அதைத் தலையைச் சுற்றி மூக்கை தொடுகிற முறையில் சொன்ன விதம் போன்றவை ஞாபக மறதி கதாநாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் வந்துவிடும் என்ற உணர்வையே விட்டுச்செல்கின்றன. தொடக்கக் காட்சியில் ‘பெல்லா காஃபி’ குறித்து ஆழமாக வர்ணிக்கும்போதே அது க்ளைமாக்ஸில் முக்கிய பங்காற்றும் என்பது புலப்பட்டுவிட்டதால், க்ளைமாக்ஸ் திருப்பத்தில் ‘சுகர்’ குறைந்துவிடுகிறது.
மொத்தமாக வரும் பத்து நகைச்சுவைகளை மட்டுமே கணக்கில் கொண்டு நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும் ‘மிஸ் யூ’ சொல்ல வைக்கும் இந்த படம், க்ளீஷேக்களைக் களைந்திருந்தால் அதை எல்லோருக்கும் சொல்ல வைத்திருக்கும்.