விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கடைசியாக விக்ரம் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், விக்ரமின் 63-வது படத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அதன்படி ‘விக்ரம் 63’ படத்தை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் 63 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது படத்தை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் சார் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்.
அவர் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதில் பெருமைக் கொள்கிறோம். கதை சொல்வதில் மேஜிக் செய்யும் மடோனுடன் இரண்டாவது முறையாக இனணந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தப் படத்தின் மூலம் உலகளவிலான பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம் என உறுதி அளிக்கிறோம்” என்று சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.