சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, துணை முதல்வர், அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் ரூ.1.30 கோடிக்கான வங்கி வரைவோலை, காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் துரைமுருகன் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கடந்த டிச.12-ம் தேதி, தலைமைச் செயலர் நா.முருகானந்தத்திடம் வழங்கினார்.
மேலும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
அதன்படி,துணை முதல்வர், அமைச்சர்கள் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான ரூ.1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750க்கான வங்கி வரைவோலைகள், காசோலைகளை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உடனிருந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.