புதுடெல்லி,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது என்பது குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது,
அரசியலமைப்பு என்பது நவீன இந்தியாவின் ஆவணம், ஆனால் பண்டைய இந்தியா இல்லாமல் நவீன இந்தியாவின் அரசியலமைப்பை எழுதப்பட்டிருக்க முடியாது. காந்தி, நேரு, அம்பேத்கரின் எண்ணங்கள் அரசியலைப்பு மூலம் உணர முடிகிறது.
அரசியலமைப்பை பாதுகாப்பதாக நீங்கள்(பாஜக) சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அரசியலமைப்பு, இந்தியர்கள் பற்றி மாற்று கருத்து கொண்டிருப்பதை சாவர்க்கரே எழுதியிருந்தார். வேதத்திற்கு அடுத்ததாக வணங்க வேண்டியது மனுஸ்மிருதி என்று சாவர்க்கர் கூறியிருந்தார். உங்கள் தலைவரின் வார்த்தையை நீங்கள்(பாஜக) ஆதரிக்கிறீர்களா?. அரசியலமைப்பை பாதுகாப்பேன் என்று பாஜக சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும். பல்வேறு தலைவர்களை புகழ பாஜக தயங்குகிறது. பெரியார், அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் நாங்கள் வணங்குகிறோம். எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அம்மாநில தலைவர்களை நாங்கள் வணங்கி போற்றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “அரசு வேலைகளில் நடக்கும் முறைகேடு மூலம் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தாராவியை அதானிக்கு கொடுக்கும்போது, அங்குள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. நியாயமான விலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது டெல்லிக்கு வெளியே கண்ணீர் புகை குண்டுகளை வீசினீர்கள்” என்றார்.