லாகூர்,
தலைநகர் டெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு இண்டிகோ விமானம் இன்று புறப்பட்டது. பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் பயணித்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நடுவானில் பயணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டபோதும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் விமானத்தை கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலையடுத்து இண்டிகோ விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் இந்திய விமான பயணிக்கு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். இதில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இண்டிகோ விமானம் கராச்சியில் இருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. டெல்லி வந்ததும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பயணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், நீண்டநேர தாமதத்திற்குபின் இண்டிகோ விமானம் எஞ்சிய பயணிகளுடன் டெல்லியில் இருந்து சவுதி புறப்பட்டு சென்றது.