யார் இந்த ஜக்தீப் தன்கர்? – எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைக்கும் மாநிலங்களவைத் தலைவரின் பின்புலம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாக, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையொட்டி, அவையின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் வழங்கிய நோட்டீஸில், ‘அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார். மாநிலங்களவையில் நியாயமற்றவராகவும், பாரபட்சமாகவும் நடந்து கொள்கிறார். தனது அரசியலமைப்பு பதவிக்கு ஏற்றவாறு அவர் நடந்து கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்திய வரலாற்றில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீது இதற்கு முன்பு மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முற்படுவது இதுவே முதல்முறை. அவைத் தலைவரின் நடவடிக்கைகளில் நீண்ட காலமாக அதிருப்தி கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், மிக நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்பு இந்த நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நோட்டீஸை அளித்துள்ளன. வெற்றிக்கு வாய்ப்பு மிகக் குறைவுதான் என்ற நிலையிலும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பின் குறியீடாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

குடியரசு துணைத் தலைவராகவும் இருக்கும் ஒருவர் மீது எதிர்கட்சிகள் ஏன் நம்பிக்கை இழந்தன? யார் இந்த ஜக்தீப் தன்கர்? அவரின் பின்புலம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை காண்போம்.

வழக்கறிஞராக… – இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவரான ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுன் மாவட்டத்தில் உள்ள கிதான் என்ற கிராமத்தில் கடந்த 1951-ம் ஆண்டு, மே 18-ம் தேதி விவாசயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தனது தொடக்கப் பள்ளி படிப்பினை சொந்த கிராமமான கிதானில் முடித்த தன்கர், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில், முழு உதவித் தொகையில் முடித்தார்.

பள்ளிப் படிப்புக்குப் பின் ஜக்தீப் தன்கர் பட்டப் படிப்பினை ராஜஸ்தானின் ஜெய்பூரில் கல்லூரியில் முடித்தார். அங்கு பிஎஸ்சி ஹானர்ஸ் உடன் இணைந்த இயற்பியல் பயின்றார். தீவிர வாசிப்பாளரான ஜக்தீப், விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். அவர் ராஜஸ்தான் மாநில ஒலிம்பிக் கூட்டமைப்பு, ராஜஸ்தான் டென்னிஸ் அமைப்புகளின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்தீப் தன்கரின் தனது அரசியல் பிரவேசத்தை ஜனதா தளம் கட்சியின் கரம் பற்றித் தொடங்கினார். கடந்த 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராக சிலகாலம் பதவி வகித்தார்.

பின்பு, கடந்த 2008-ம் ஆண்டு ஜக்தீப் தன்கர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,‘நிர்வாகத்தில் முழுமையான திறன் பெற்ற முதல் தலைமுறை வழக்கறிஞர்’ என்று இவரை வர்ணித்திருந்தார். பிரதமர் மோடி, ‘தன்கருக்கு அரசியலமைப்பில் சிறந்த அறிவு உண்டு. மேலும், அவர் பேரவை விவகாரங்களில் நன்கு அறிந்தவர்’ என்று தெரிவித்திருந்தார். எனினும், கட்சிகளைக் கடந்து அனைத்து கட்சித் தலைவர்களிடமும் நல்ல உறவுகளைப் பேணுபவர் என்று அறியப்பட்டவர்.

ஆளுநராக மம்தாவுடன் மோதல்… – இந்தப் பின்புலத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கு ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுடன் முரண்பட்ட போக்குகளால் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார்.

அப்போது முதலே, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ‘மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்துவதில்லை’, ‘ஆளுநர் மாளிகை கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று மேற்கு வங்க மாநில அரசை தொடர்ந்து தாக்கி வந்தார். இதனால், மேற்கு வங்கத்தில் ஆளுநர் தன்கருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து தீவிரமடைந்தது.

ஒருகட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் தன்கருக்கு விடுத்த செய்தியில், “நாங்கள் இன்னமும் கூட அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு என்னுடைய எளிமையான கோரிக்கை என்னவெனில், நீங்கள் அதிகப்படியாக நடந்துகொள்ளாதீர்கள். எங்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தால், நாங்கள் அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும் எதிர்கொள்ள வேண்டிவரும்” என்று தெரிவித்திருந்தார்.

பாஜக ‘டிக்’ செய்தது ஏன்? – இந்தச் சூழ்நிலையில்தான் 2022-ல் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வந்தது. அப்போது 2024 மக்களவைத் தேர்தலுக்கும், மோடி 3.O-வுக்கும் பாஜக தயாராகி வந்த காலக்கட்டம். இதனால், ‘பலம் குன்றியுள்ள மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளை சமாளித்து அவையை நடத்த ஒருவர் தேவை’ என்ற நிலை பாஜவுக்கு இருந்தது.

அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின திரவுபதி முர்முவை நிறுத்தி வெற்றி பெற்றிருந்த பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு, அப்போதைய மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கரை நிறுத்தியது. அந்த முடிவை, பாஜகவின் உயர் முடிவுகளை எடுக்கும் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, என்டிஏ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். இதனை அறிவித்த பாஜக தலைவர் நட்டா, “இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு என்டிஏ வேட்பாளராக ‘விவசாயி மகன்’ ஜக்தீர் தன்கர் அறிவிக்கப்படுகிறார். தற்போது மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருக்கிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், சமூக – பொருளாதார தடைகளைத் தகர்த்து பொது வாழ்வில் பல உயர் பதவிகளை அடைந்துள்ளார். சட்டப் படிப்புடன், இயற்பியல் படிப்பையும் முடித்துள்ள தன்கர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக இருந்துள்ளார். மதிப்புமிக்க ‘மக்களின் ஆளுநர்’ ஆக உள்ளார். அவரைத் தேர்வு செய்யும்போது இவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடந்து நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளே பெற்றிருந்தார். இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால், ஆளுநராக மாநில அரசுடன் மோதல் போக்கு கொண்டிருந்த மேற் குவங்க எம்.பி.க்கள், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்திருந்தனர் என்பதே.

குடியரசுத் துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றதற்காக, அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் பாராட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட அப்போதைய மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் உங்களை எதிர்த்து வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததன் ரகசியம் என்ன? என்ன மாஜிக் செய்தீர்கள்? நான் ஒரு மாயஜாலக்காரன், என்னைவிட மிகப் பெரிய மாயாஜாலக்காரர் நீங்கள்” என்று கிண்டலடித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

மேற்கு வங்க ஆளுநராக, அம்மாநில அரசுடன் மோதல் போக்கை கொண்டிருந்த ஜக்தீப் தன்கர், குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவையின் தலைவராக பதவியேற்ற 2022-ம் ஆண்டில் இருந்து, தங்களுடன் முரண்பட்ட போக்கை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மாநிலங்களவைத் தலைவராக… – 2023-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரினர். அப்போது, இரு அவைகளிலும் 146 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டபோது, இந்த மோதல் போக்கு மோசமடைந்தது. தற்போது அதானி, சம்பல் உள்ளிட்ட விவகாரத்தையொட்டிய விவாதங்களின்போது, உச்சத்தைத் தொட்டது மோதல் போக்கு.

“கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடந்து கொண்ட விதம், அவரது பதவிக்கு எதிரானது. சிலசமயங்களில் அரசாங்கத்தைப் புகழ்ந்து பாராட்டுகளை வாசிக்கத் தொடங்குகிறார். சில சமயங்களில் தன்னை ஆர்எஸ்எஸ்ஸின் ஏகலைவன் என்று கூறிக்கொள்கிறார். இம்மாதிரியான பேச்சு அவருடைய பதவிக்கு ஏற்புடையது அல்ல.

சபைக்குள் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை அவர், தனது எதிரிகளாகப் பார்க்கிறார். எதிர்க்கட்சியினரை கூறி அவமதிக்கிறார். பள்ளித் தலைமை ஆசிரியர் போல உபதேசம் செய்கிறார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையில் 5 நிமிடம் பேசினால், சபாநாயகரே 10 நிமிடம் பேசுகிறார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை பேசவிடாமல் தடுக்கிறார். எதிர்க்கட்சிகளின் பாதுகாவலராக இருக்க வேண்டிய மாநிலங்களவைத் தலைவர், ஆளும் கட்சி உறுப்​பினர்களை மட்டுமே பேச அனும​திக்​கிறார். எங்களை அவதிக்க ஆளும் கட்சியினரை ஊக்கப்​படுத்துகிறார்” என்றெல்லாம் கதறினார் கார்கே.

இந்தச் சூழ்நிலையில், நீண்டகால எண்ணமான, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இப்போது கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 67(பி)-ன் கீழ் பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு, அதேநேரத்தில் மக்களவையால் அங்கீகரிக்கப்பட்டால், குடியரசுத் துணை தலைவரை பதவி நீக்கம் செய்யலாம். குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவைத் தலைவராகவும் இருக்கிறார். 14 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய கூட்டத் தொடர் டிசம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 254. இதில் 14 இடங்கள் காலியாக உள்ளன. எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றியுடன் நிறைவேற 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், எதிர்க்கட்சிகளின் வசம் இப்போது 85 உறுப்பினர்களே உள்ளனர். மதில் மேல் பூனையாக அணி சேராமல் நிற்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும் கூட, பெரும்பான்மை எண்ணிக்கையை பெற முடியாது என்பதே நிதர்சனம். இதனையே ஆளுங்கட்சியும் அவையில் சுட்டிக் காட்டியது.

எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சிக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவையில் பேசிய ஜகதீப் தன்கர், “நான் விவசா​யி​யின் மகன். எந்த பலவீனத்​தை​யும் வெளி​யில் காட்​டிக்கொள்ள மாட்​டேன். என் தாய்​நாட்டுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்​வேன்” என்று முழங்கினார்.

ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு கூட இல்லை என்று தெரிந்தும், எதிர்கட்சிகளின் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதில், வெற்றி பெற முடியாவிட்டாலும், மாநிலங்களவைத் தலைவர் மற்றும் ஆளும் தரப்பு மீதான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பதிவு செய்வது காலத்தின் கட்டாயம் என்கிறார்கள் இண்டியா கூட்டணியினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.