குகேஷ் தமிழரா தெலுங்கரா என ஒரு பட்டிமன்றமே ஓடிக்கொண்டிருக்கிறது. 130 ஆண்டுகளுக்கும் மேலான செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளம் வயதில் சாம்பியனாகியிருக்கும் சாதனையாளர். இவருக்கு முன்னால் ரஷ்ய ஜாம்பவான் கேரி கேஸ்பரோவ் 22 வயதில் உலக சாம்பியன் ஆகியிருந்தார். குகேஷூக்கு 18 வயதுதான் ஆகிறது.
உலக சாம்பியன் ஆவது அத்தனை எளிதான விஷயமில்லை. அதற்கென கடந்து வர வேண்டிய படிநிலைகள் கடினமானவை. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்றால் மட்டும்தான் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப்பெற முடியும். கேண்டிடேட்ஸ் தொடரில் உலகின் டாப் 8 வீரர்கள் கலந்துகொள்வார்கள். அந்த 8 வீரர்களில் ஒருவராக கேண்டிடேட்ஸூக்கு தேர்வாவதே மாபெரும் சவால்தான். உலகக்கோப்பைத் தொடர்களின் செயல்பாடு, FIDE Circuit போட்டிகளின் செயல்பாடு, தரவரிசை என இந்த 8 வீரர்களை தேர்ந்தெடுக்க பல வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பொருந்திப் போகும் வகையில் ஆடிதான் கேண்டிடேட்ஸூக்கு தேர்வாக முடியும். கேண்டிடேட்ஸ் ஒரு யுத்தம். அந்த டாப் 8 வீரர்களும் தங்களுக்குள் மோதி அதில் முதலாவதாக வரும் வீரர்தான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வருவார்.
குகேஷ் இதையெல்லாம் கடந்துதான் சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்தார். சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வீரர் உளவியல்ரீதியாக பெரும் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், 14 சுற்றுகள் 14 நாட்களுக்கு நடக்கும். (இடையில் சில ஓய்வு நாட்கள் உண்டு)
ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கிலிருந்து ஐந்து மணி நேரத்தை ஒரே அறைக்குள் அந்த செஸ் போர்டுக்கு முன்னால் செலவிட வேண்டும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுப்பலத்துடன் அயர்ச்சியடையாமல் இருந்தால் மட்டுமே சௌகரியமாக காய்களை நகர்த்த முடியும். பெரும் உழைப்பும் கவனக்குவிப்பும் இருந்ததால் மட்டுமே குகேஷ் இங்கே வென்றிருக்கிறார்.
இதையெல்லாம் பாராட்டி மகிழ்வதை விட்டுவிட்டு அவரின் அடையாளத்தை தோண்டி எடுத்து பிரிந்து நின்று நாற்றம் வீசும் வகையில் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற போது அடித்து பிடித்து பி.வி.சிந்துவின் சாதி என்னவென ஒரு கும்பல் தேடியது. கேட்ச் விட்டதற்காக ஷமியை மத அடையாளத்தை முன் வைத்து தாக்கினார்கள். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தீரமாக ஆடி நான்காம் இடம்பிடித்த இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் தலீத் வீராங்கனைகளை ஒரு மூடர் கூட்டம் வசைபாடியது. இந்த மாதிரியெல்லாம் விளையாட்டு வீரர்களை ஒரு குறுகியப் அடையாளத்துக்குள் சுருக்கி பிளவுவாதம் பேசுவது அறமற்ற செயல்.
விளையாட்டு எப்போதுமே பல்வேறு தரப்பட்ட மக்களை இணைக்கும் கருவியாக மட்டுமே இருந்திருக்கிறது. 2022 ஐ.பி.எல் சீசனிலிருந்து இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை முன் வைக்கலாம். அந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சிறப்பாக ஆடியிருந்தார். அவருக்கு இந்தி மட்டும்தான் தெரியும். ஆனால், அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெய்ன். அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்.
உம்ரான் அப்போதுதான் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் இளம் வீரர். அவரை மொழி தெரியாமல் ஸ்டெய்னால் எப்படி பயிற்றுவித்திருக்க முடியும்? ஆனால், எந்தத் தடையுமின்றி ஸ்டெய்ன் உம்ரானுக்கு பயிற்சியளித்தார். இதைப்பற்றி அவர் பேசுகையில், ”கிரிக்கெட்டே ஒரு உலகமொழிதான். நாங்கள் கிரிக்கெட் மொழியில் பேசிக்கொள்வோம். நான் என்ன ‘Length’ இல் வீசப்போகிறாய் என கேட்டால், நான் ‘Hard Length’ இல் வீசப்போகிறேன். ‘Top of the off Stump’ இல் வீசப்போகிறேன். இப்படியாக அவர் பதில் கூறுவார். எங்களால் கிரிக்கெட் மொழியில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். மேலும், அவர் முகத்தை பார்த்தே என்னால் உணர்ந்துவிட முடியும். அவர் சந்தோஷமாக இருந்தால், அவர் முகத்தில் சிரிப்பு தென்பட்டால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். அவர் கொஞ்சம் பதற்றமாக இருப்பது போல் தெரிந்தால் அருகில் சென்று தோளில் கை போட்டுக் கொள்வேன். வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத் அல்லது புவி என யாரையாவது அழைப்பேன். அவர்கள் மூலம் என்ன பிரச்சனை என்பதை கேட்டுக் கொள்வேன். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு எப்படியேனும் ஒரு வழியை கண்டுபிடித்துவிடுவோம்’ என ஸ்டெய்ன் பேசியிருப்பார்.
கடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தது. சென்னையில் போட்டிகள் நடந்தது. வெறுப்பை விதைக்க இந்தியா – பாகிஸ்தான் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த பாகிஸ்தான் அணி இங்கு அவர்களுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நெகிழ்ந்தனர். இந்த மண்ணின் கலாச்சாரத்தை, இந்த மண்ணின் உணவை எப்போதும் மறக்கமாட்டோம் என கூறி சென்றனர். அங்கே அரசியலை கடந்து பிரிவினைகளை கடந்து விளையாட்டுதான் முதன்மையாக இருந்தது. 1999 இந்தியா vs பாகிஸ்தான் சென்னை டெஸ்ட்டை நம்மால் மறக்க முடியுமா? வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணிக்காக எழுந்து நின்று கைத்தட்டிய சம்வத்தை விட விளையாட்டின் சக்தியை வேறெந்த சம்பவத்தால் உரக்கக் கூற முடியும்.
இதுதான் விளையாட்டின் தன்மை. இங்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் கூட குகேஷூக்கு புரியுமா என தெரியவில்லை. அந்தளவுக்கு சிறுவயதில் அவர் செஸ்ஸில் உச்சத்தை எட்டியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் அளப்பரிய புகழை தேடிக்கொடுத்திருக்கிறார். அவரை நோகடிக்கும் பதிவுகள் மனித நேயமற்றவை.
விளையாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கான ஆயுதம். அதையே மக்களை கூறு போடுவதற்காக பயன்படுத்தாதீர்கள். உலக மக்களை தன்னுடைய ஆட்டத்தின் வழி ஒன்றிணைக்கும் விளையாட்டு வீரன் என்பதுதான் குகேஷின் அடையாளமன்றி வேறெதுவுமில்லை.