அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிக்கு எதிரான கடிதம்; அதிமுக கையெழுத்திடாதது ஏன்? – முத்தரசன் கேள்வி

சென்னை: “வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடுகுறித்தும் இபிஎஸ் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த டிச.8-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்துத்துவா அரசியல் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சங் பரிவார் கூட்டத்தில் தீவிர அமைப்பு விஸ்வ இந்து பரிஷத். இது 1992 பாபர் மசூதியை இடித்து தகர்ப்பதில் முன்னணி வகித்தது.

இந்த அமைப்பின் செயலை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் நீதிபதி எந்த முறையில் கலந்து கொண்டார் என்ற வினா எழுகிறது. குதிரை கீழே தள்ளியதுடன் நில்லாமல் குழியும் பறித்தது என்பது போல், சட்டவிதிகளை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்சு பேசியுள்ளார்.

அவரது பேச்சு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நீதிபதியாக பொறுப்பேற்கும் போது எடுத்துக் கொண்ட சத்திய பிரமாணத்திற்கு விரோதமானது. நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் கேடு விளைவித்து, இறையாண்மைக்கு ஊறு செய்யும் தேச விரோதச் செயலாகும்.

நீதித்துறையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பற்ற பண்பை தகர்த்து, அநாகரிகமாக செயல்பட்ட, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அவரை நீதிபதி பொறுப்பில் இருந்து நீக்கவும், நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்றி எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் அறிவிப்பு கொடுத்துள்ளனர்.

இந்த அறிவிப்பில் அதிமுக கையெழுத்து போடவில்லை என்பது அதன் இரட்டை நாக்கு சந்தர்ப்பவாத செயலை வெளிப்படுத்துகிறது. பாஜகவோடு கூட்டணி இல்லை எனில், நீதிபதியின் வகுப்புவாத வெறுப்பு, மதவெறி வன்ம பேச்சை கண்டித்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் 55 பேர் கையெழுத்திட்டு மாநிலங்களவை செயலாளரிடம் அறிவிப்பு கடிதம் கொடுத்துள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் கையெழுத்துப் போடாமல் நழுவிக்கொண்டது ஏன்?

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அதிமுக விளக்க வேண்டும். அதிமுக வகுப்புவாத, மதவெறி சக்திகளின் பக்கமா? மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் பக்கமா? அது எந்தப்பக்கம் நிற்கிறது என்பதை அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெளிவு படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.