புதுடெல்லி: டெல்லியில் 6 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம் ஆகும்.
டெல்லி ஆர்.கே.புரத்தில் ‘டெல்லி பப்ளிக் ஸ்கூல்’ உள்ளது. இப்பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நேற்று காலையில் அப்பள்ளியில் சோதனை நடத்தினர்.
இதுபோல் ரயான் சர்வதேச பள்ளி, கியான் பாரதி பள்ளி உள்ளிட்ட மேலும் 5 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அந்தப் பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் மிரட்டல் அனைத்தும் புரளி எனத் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் இந்த 6 பள்ளிகளுக்கும் ஒரே இ-மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை 44 பள்ளிகளுக்கும் இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 30 பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சோதனையில் அவை அனைத்தும் புரளி என தெரியவந்தது. இந்நிலையில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.